செய்திகள்
திறக்கப்பட்ட கார் கதவு மீது மோதல்: மோட்டார் சைக்கிளில் வந்த விவசாயி பலி
திறக்கப்பட்ட கார் கதவு மீது மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சாவூர்:
மன்னார்குடி பகுதியில் இருந்து கார் ஒன்று தஞ்சை நோக்கி நேற்றுமாலை வந்து கொண்டிருந்தது. தஞ்சையை அடுத்த காட்டூர் அருகே சாலையோரத்தில் காரை நிறுத்திய டிரைவர், தன்பக்கமுள்ள கதவை திறந்து வெளியே வந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த ஒருவர், திறக்கப்பட்ட கார் கதவில் மோதினார். இதில் தூக்கி வீசப்பட்ட அவர், சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதை அறிந்த தஞ்சை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீஸ்வரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அதில் பலியானவர் தஞ்சையை அடுத்த கீழஉளூரை சேர்ந்த விவசாயி முத்துக்கிருஷ்ணன் (வயது65) என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவரது உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.