செய்திகள்
கோப்புபடம்

சம்பா சாகுபடி-தாராபுரத்தில் நடவு நாற்றங்கால் அமைக்கும் பணிகள் தீவிரம்

Published On 2021-11-08 14:48 IST   |   Update On 2021-11-08 14:48:00 IST
தாராபுரத்தில் அமராவதி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதுடன், கிளை வாய்க்கால்களிலும் நீர் வரத்து அதிகரித்துள்ளது.
தாராபுரம்:

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி ஆற்று நீரின் மூலமாக திருப்பூர், கரூர்மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெற்று வருகின்றன.

இந்த நிலையில், தற்போது பெய்துவரும் வடகிழக்குப்பருவமழை காரணமாக அமராவதி அணையின் மொத்த கொள்ளளவான 90 அடியில் 87.5 அடிக்கு தண்ணீர் உள்ளது. இதைத்தொடர்ந்து அமராவதி அணையில் இருந்து விநாடிக்கு 1,600 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தாராபுரத்தில் அமராவதி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதுடன், கிளை வாய்க்கால்களிலும் நீர் வரத்து அதிகரித்துள்ளது. ஆகவே  தாராபுரம், அலங்கியம், கோவிந்தாபுரம், கொழிஞ்சிவாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பழைய ஆயக்காட்டு, புதிய ஆயக்காட்டு பாசனம் மூலமாக சம்பா சாகுபடிக்காக 22 ஆயிரம் நெல் நடவு செய்யப்படவுள்ளது.

இதற்காக விவசாயிகள் நடவு நாற்றங்கால் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் 2 வாரங்களில் நாற்றுகள் வளர்ந்த பின்னர் விவசாயிகள் தங்கள் வயல்களில் நெல் நடவு செய்யும் பணிகளை  தொடங்கவுள்ளனர்.

தாராபுரம் மற்றும் அதனை  சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த ஆண்டு சம்பா சாகுபடி பொய்த்துப்போன நிலையில் தற்போது போதிய மழை உள்ளதால் தங்களது வயல்களில் நெல் நடவு செய்வதில் ஆர்வம் காட்டி வருவதாக நடவு நாற்றங்கால் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News