செய்திகள்
சாக்கடையில் தவறி விழுந்த குதிரை

சாக்கடையில் தவறி விழுந்த குதிரை - தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டனர்

Published On 2021-11-03 07:01 GMT   |   Update On 2021-11-03 07:01 GMT
கோபிசெட்டிபாளையம் பகுதியில் சாக்கடையில் தவறி விழுந்த குதிரையை தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டனர்.

கோபி:

கோபிசெட்டிபாளையம் நகராட்சி பகுதியில் பலர் குதிரைகளை வளர்த்து வருகிறார்கள். இதனால் அந்த பகுதியில் ஏராளமான குதிரைகள் ரோட்டில் சுற்றி திரிகின்றன.

இந்த நிலையில் கோபி நகராட்சி சுப்பு நகர் பகுதியில் இன்று காலை ஒரு குதிரை ரோட்டில் சுற்றி திரிந்து கொண்டு இருந்தது. அந்த குதிரை அந்த பகுதியில் உள்ள சாக்கடை அருகே மேய்ந்து கொண்டு இருந்தது.

அந்த குதிரை திடீரென சாக்கடையில் தவறி விழுந்தது. இதையடுத்து குதிரை சத்தம் போட்டு கொண்டு இருந்தது. இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்து கோபி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து சாக்கடையில் விழுந்த குதிரையை உயிருடன் மீட்டனர்.

இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:-

கோபி நகராட்சி பகுதியில் பலர் குதிரைகள் வளர்த்து வருகிறார்கள். அந்த குதிரைகள் அடிக்கடி வெளியேறி ரோட்டில் சுற்றி திரிகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.

மேலும் கோபி பஸ் நிலையம் பகுதியில் சுற்றி திரியும் குதிரைகள் சில சமயங்களில் சண்டை போட்டு கொள்கிறது. இதனால் பஸ் ஏற வரும் பொதுமக்கள் அலறி அடித்து கொண்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது.

இதே போல் சத்தியமங் கலம் ரோடு, மொடச்சூர் ரோடு, அரசு ஆஸ்பத்திரி பகுதி, ஈரோடு ரோடு, கொடிவேரி ரோடு பகுதிகளிலும் குதிரைகள் அதிகளவில் ரோட்டில் திரிகிறது. இதனால் அந்த வழியாக வரும் இரு சக்கர வாகன ஓட்டிகள் ரோட்டில் வரும் குதிரையை கண்டு வாகனத்தை திடீரென நிறுத்துவதால் அவர்கள் கீழே விழுந்து எழுந்து செல்லும் நிலையும் உள்ளது. மேலும் விபத்துகள் ஏற்படும் அபாயமும் உள்ளது.

எனவே கோபிசெட்டிபாளையம் பகுதியில் ரோட்டில் சுற்றி திரியும் குதிரைகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர். 

Tags:    

Similar News