செய்திகள்
கோப்புபடம்

கரடிவாவியில் மின்வெட்டால் தவிக்கும் தொழில் நிறுவனங்கள்

Published On 2021-11-02 10:13 IST   |   Update On 2021-11-02 10:13:00 IST
டீசல் விலை உயர்வால் ஜெனரேட்டர் பயன்படுத்தியும் தொழில் செய்ய முடியாத நிலை உள்ளது. இதனால் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்படுகிறது.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டம்  கரடிவாவி ஊராட்சியில் கரடிவாவி புதூர், இந்திரா நகர், கிருஷ்ணா நகர் உள்ளிட்ட பகுதியில் விவசாயம் மற்றும் விசைத்தறி, சைசிங், ஸ்பின்னிங் உள்ளிட்ட பல்வேறு தொழில் துறை நிறுவனங்கள் அமைந்துள்ளன. இப்பகுதிகளில் சமீப காலமாக ஏற்பட்டு வரும் ஓயாத மின்வெட்டு பிரச்சினை தொழில் துறையினரை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

இதுகுறித்து தொழில் துறையினர் கூறியதாவது:

கடந்த காலங்களில் காரணம்பேட்டை துணை மின் நிலையத்துடன் இணைப்புகள் இருந்தன. கரடிவாவி துணை மின் நிலையத்துக்கு மாற்றப்பட்டது முதல் அதிகளவில் மின்வெட்டு பிரச்சினைகளை சந்தித்து வருகிறோம்.

குறைவான மின் அழுத்தம், அடிக்கடி மின்வெட்டு என தினமும் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் தொடர்ந்து புகார் அளித்தும் பயனில்லை. டீசல் விலை உயர்வால் ஜெனரேட்டர் பயன்படுத்தியும் தொழில் செய்ய இயலாது. 

இதனால் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்படுகிறது. தொற்று பாதிப்புக்கு பின் தொழில் பழைய நிலைக்கு திரும்பும் என எதிர்பார்த்தோம். ஓயாத மின்வெட்டு பிரச்சினையால் பெரும் இழப்பினை சந்தித்து வருகிறோம். இதனால் தமிழக முதல்வருக்கு புகார் அனுப்பி உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Tags:    

Similar News