பள்ளிகொண்டா அருகே அரசு பஸ் மோதி விவசாயி பலி
வேலூர்:
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த வெட்டுவானம், பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் சதாசிவம் (வயது53). விவசாயி. இவருக்கு ஒரு மகள், 2 மகன்கள் உள்ளனர்.
சதாசிவத்திற்கு தேசிய நெடுஞ்சாலை அருகே ஏரிக் கரையை ஒட்டி விவசாய நிலம் உள்ளது. சதாசிவம் தினமும் விவசாய நிலத்திற்கு சென்று வருவது வழக்கம். இந்த நிலையில் இன்று காலை 6 மணி அளவில் சதாசிவம் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். இன்று அதிகாலை கடுமையான பனி மூட்டம் நிலவியதால் ஓசூரில் இருந்து சென்னை நோக்கி வேகமாக வந்த அரசு பஸ் சாலையை கடக்கும் சதாசிவத்தின் மீது எதிர்பாராத விதமாக மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட சதாசிவம் தலையில் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த பள்ளிகொண்டா போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சதாசிவம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.