செய்திகள்
அனுமதியின்றி செயல்பட்ட 3 காப்பகங்களுக்கு சீல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் அனுமதியின்றி செயல்பட்ட 3 காப்பகங்களுக்கு சீல்

Published On 2021-10-30 19:44 IST   |   Update On 2021-10-30 19:44:00 IST
புதுக்கோட்டை மாவட்டத்தில் அனுமதியின்றி செயல்பட்ட 3 காப்பகங்களுக்கு `சீல்' வைத்து கலெக்டர் கவிதாராமு அதிரடி நடவடிக்கை எடுத்தார்.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டத்தில் உரிய அனுமதியின்றி முதியோர் இல்ல காப்பகங்கள் செயல்படுவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு புகார்கள் வந்தன. இதையடுத்து அறந்தாங்கி அருகே அழியாநிலை கிராமத்தில் நமது இல்லம் அறக்கட்டளை சார்பில் செயல்பட்ட முதியோர் இல்லம் மற்றும் ஒத்தக்கடையில் புதிய நமது இல்லத்தில் கலெக்டர் கவிதாராமு நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது மேற்கண்ட காப்பகங்கள் உரிய அனுமதி இல்லாமல் செயல்படுவது தெரிய வந்தது. இதையடுத்து அந்த 2 காப்பகங்களுக்கும் கலெக்டர் `சீல்' வைக்க உத்தரவிட்டார். அதன்படி `சீல்' வைக்கப்பட்டன.

இதைத்தொடர்ந்து அழியாநிலை முதியோர் காப்பகத்தில் இருந்த 31 ஆண்கள், 37 பெண்கள் என 68 பேரும், ஒத்தக்டை புதிய நமது இல்லத்தில் இருந்த 51 ஆண்கள், 8 பெண்கள் என 59 பேரும் என மொத்தம் 127 பேரையும் புதுக்கோட்டை முத்துலெட்சுமி ரெட்டி பழைய அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அவர்களுக்கான தகுந்த சிகிச்சைகள் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டன. அவர்கள் குணமடைந்ததும் சொந்த ஊர் செல்ல நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

பின்னர் கந்தர்வக்கோட்டை வட்டம், அரியானிப்பட்டியில் செயல்படுகிற ரெனிவல் பவுண்டேஷன் என்ற மனநலப் பராமரிப்பு மையத்தை ஆய்வு செய்து அங்கு தங்கியிருந்த 105 பேரிடம் வழங்கப்படும் உணவு, மருத்துவ சிகிச்சை மற்றும் சொந்த விருப்பத்தின்பேரில் வந்தீர்களா? என்ற விவரத்தையும் கேட்டறிந்தார். இந்த காப்பகமும் உரிய அரசு அனுமதி பெறாமல் செயல்பட்டதால் `சீல்' வைக்கப்பட்டது. அங்கு தங்கியிருந்த 105 பேரையும் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி மனநல சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.

இதேபோல வடுகப்பட்டியில் உள்ள வள்ளலார் காப்பகத்தில் மன வளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான இல்லத்தினை கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார். அங்கு தங்கியிருந்த 24 மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் உணவு தரமானதாக உள்ளதா? என்பதையும், அடிப்படை வசதிகளான குடிநீர், தங்குமிடம், கழிப்பிடம் ஆகிய வசதிகள் பராமரிக்கப்படுகிறதா? என்பதையும் பார்வையிட்டார். மேலும் ஆசிரியர்களின் கல்வித் தகுதி, வருகைப் பதிவேடு ஆகியவற்றையும் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் அடிப்படை வசதிகளை மேம்படுத்த உத்தரவிட்டதோடு, அரசு விதிமுறைகள் முறையாக கடைபிடிக்கப்பட்டுள்ளதா? என ஆய்வு செய்து நோட்டீஸ் அனுப்ப சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது வருவாய் கோட்டாட்சியர்கள் சொர்ணராஜ், அபிநயா, மாவட்ட மனநல திட்ட அலுவலர் கார்த்திக் தெய்வநாயகம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் குணசீலி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Similar News