செய்திகள்
கஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சியில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.

அருப்புக்கோட்டையில் நடந்த தடுப்பூசி முகாமை பார்வையிட்ட மு.க.ஸ்டாலின்

Published On 2021-10-30 13:16 IST   |   Update On 2021-10-30 13:16:00 IST
தமிழகம் முழுவதும் இதுவரை நடந்த 6 கட்ட மெகா தடுப்பூசி முகாம்களில் இதுவரை 1 கோடியே 33 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
அருப்புக்கோட்டை:

தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தவும், தொற்றில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கவும் தடுப்பூசி போடும் பணிகளை அரசு தீவிரப்படுத்தி உள்ளது.

ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள் என அனைத்து இடங்களிலும் தினமும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தாலும், மக்கள் அனைவரும் தடுப்பூசி போடுவதற்கு ஏதுவாக வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை மெகா சிறப்பு தடுப்பூசி முகாமை நடத்தி வருகிறது.



தமிழகம் முழுவதும் இதுவரை நடந்த 6 கட்ட மெகா தடுப்பூசி முகாம்களில் இதுவரை 1 கோடியே 33 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் 7-வது கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாம் இன்று நடந்தது. விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை யூனியனுக்கு உட்பட்ட கஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சியில் உள்ள ராஜ்கோ மகாலிலும் தடுப்பூசி முகாம் நடந்தது.

முத்துராமலிங்கத்தேவர் ஜெயந்தியையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அதன் பிறகு மதுரை திரும்பும் வழியில் விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை யூனியனுக்கு உட்பட்ட கஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சியில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். தடுப்பூசி போட வந்திருந்த பொதுமக்களிடம் பேசிய முதல்வர், மருத்துவ பணியாளர்களிடம் விவரங்களையும் கேட்டறிந்தார்.

அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாத ரெட்டி ஆகியோர் உடனிருந்தனர்.

அதன்பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கார் மூலம் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார்.

Similar News