செய்திகள்
சிவகாசி தாலுகாவில் 1 லட்சத்து 39 ஆயிரம் பேர் முதல் தவணை கொரோனா தடுப்பூசி போடவில்லை - அதிர்ச்சி தகவல்
சிவகாசி தாலுகாவில் 1 லட்சத்து 39 ஆயிரம் பேர் முதல் தவணை கொரோனா தடுப்பூசி போடவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
சிவகாசி:
இந்தியாவில் கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கடைசி வாரம் முதல் இன்று வரை கொரோனா தனது கோர தாண்டவத்தை நிறுத்தியப்பாடில்லை. தொற்று குறைந்ததால். சில தளர்வுகளை மத்திய, மாநில அரசுகள் அறிவித்தாலும் கொரோனா முற்றிலும் ஒழிக்கப்படவில்லை. தடுப்பூசி கண்டுபிடிப்புக்கு பின்னர் இந்தியாவில் கொரோனா பரவலின் வேகம் குறைந்துள்ளது. இதுவரை 100 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு மிகப்பெரிய சாதனையை மத்திய அரசு நிகழ்த்தி உள்ளது. தமிழகத்திலும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. வாரந்தோறும் மெகா சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
சிவகாசி தாலுகாவில் மட்டும் 4 லட்சத்து 47 ஆயிரத்து 700 பேர் வசித்து வருகிறார்கள். இதில் தடுப்பூசி போட தகுதியானர்கள் என மாநில சுகாதாரத்துறை 3 லட்சத்து 42 ஆயிரத்து 234 பேரை அறிவித்துள்ளது. இதில் 2 லட்சத்து 3 ஆயிரத்து 32 பேர் முதல் தவணை கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர். இது மொத்தம் உள்ள மக்களில் 60 சதவீதம் தான். மற்ற 40 சதவீதம் பேர் இன்னும் முதல் தவணை கொரோனா தடுப்பூசி போடவில்லை.
அதாவது சிவகாசி தாலுகாவில் 1 லட்சத்து 39 ஆயிரம் பேர் முதல் தவணை கொரோனா தடுப்பூசி போடவில்லை. இதே போல் 2-வது தவணை கொரோனா தடுப்பூசி 65 ஆயிரத்து 927 பேர் மட்டும் போட்டுள்ளனர். சிவகாசி தாலுகாவில் மட்டும் முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசிகள் 2 லட்சத்து 68 ஆயிரத்து 959 பேருக்கு தான் போடப்பட்டுள்ளது.
இது குறித்து சுகாதார அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
சிவகாசி தாலுகாவில் இதுவரை 1 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் இன்னும் முதல் தவணை தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என்பது எங்களுக்கு அதிர்ச்சியாக தான் இருக்கிறது. இவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்று சுகாதாரத்துறை ஊழியர்கள் தேடி வருகிறார்கள். சிறப்பு முகாம்கள் நடத்தியும் இவர்கள் தடுப்பூசி போட முன்வராத நிலையில் இவர்களை தேடி தடுப்பூசி செல்ல உள்ளது. தீபாவளி பண்டிகை முடிந்தவுடன் வீடு, வீடாக சென்று தடுப்பூசி போட்டவர்களின் விவரங்களை சேரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அப்போது தடுப்பூசி போடாதவர்கள் இருந்தால் அவர்களுக்கு உடனே தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்படும்.
இதுவரை சிவகாசி பகுதியில் 7 முறை மெகா சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. தினமும் 10 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படுகிறது. சிவகாசி நகராட்சி பழைய கட்டிடம், திருத்தங்கல் பழைய நகராட்சி அலுவலகம், சிவகாசி ஜானகி அம்மாள் மகப்பேறு நிலையம் ஆகிய இடங்களில் தினமும் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. இதுவரை தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் தங்களது ஆதார் எண்ணை கூறி தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.