செய்திகள்
திருவரங்குளம் அருகே உள்ள திருநகர் பகுதியில் வீட்டுக்குள் புகுந்த மழைநீரை படத்தில் காணலாம்.

வடகிழக்கு பருவமழை தொடங்கியது: வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி

Published On 2021-10-27 13:49 GMT   |   Update On 2021-10-27 13:49 GMT
வடகிழக்கு பருவமழை தொடங்கியதால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
திருவரங்குளம்:

புதுக்கோட்டை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இதன் காரணமாக நேற்று முன்தினம் இரவு 9.45 மணி அளவில் புதுக்கோட்டையில் பலத்த இடி, மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து மழை பெய்தது. இதன் காரணமாக சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இதற்கு முன்னதாக பெய்த மழை மற்றும் பருவ மழையின் காரணமாக மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்கள், கண்மாய்கள் அதன் கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளது. தொடர்ந்து மழை நீடிக்கும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், திருக்கட்டளை ஊராட்சி, மேலக்கொல்லையில் உள்ள பாசனகுளம் நிரம்பியதால் அண்ணா நகர், திருநகர், சீனிவாசா நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் இரவு முழுவதும் தூங்க முடியாமல் அவதிப்பட்டனர். ஒவ்வொரு முறை மழை பெய்யும் போதெல்லாம் கடந்த 10 ஆண்டுகளாக இந்நிலை நீடித்து வருவதாகவும், மழைநீரில் பாம்பு, விஷ பூச்சிகள் மிதந்து வருவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர்.

ஆகவே, இப்பகுதியில் உள்ள வரத்து வாரிகளை சரிசெய்து திருநகர்- மேட்டுப்பட்டி சாலையில் பாலம் அமைத்து இனிவரும் காலங்களில் தண்ணீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் மேட்டுப்பட்டி கேட் பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் பெரியசாமி தெரிவித்தார்.

காரையூர் மற்றும் அரசமலை, நல்லூர், மேலத்தானியம், ஒலியமங்களம் உள்பட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. இதனால் ஒளியமங்களத்தைச் சேர்ந்த மூக்கன் மகன் அழகு என்பவரது ஓட்டு வீடு மழையின் காரணமாக இடிந்து விழுந்தது. இதனை காரையூர் வருவாய் ஆய்வாளர் பாண்டி, கிராம நிர்வாக அதிகாரி ராஜேஸ்வரி ஆகிேயார் பார்வையிட்டனர்..

பொன்னமராவதி ஒன்றியம், மேலைச்சிவபுரி ஊராட்சி பகுதியில் மாவட்ட கலெக்டரின் உத்தரவின்படி, ஒன்றிய ஆணையர்கள் மேற்பார்வையில் மணிமுத்தாறு பாலம் அருகே வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் விதமாக கலிங்கி செல்லும் இடத்தில் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் 100 நாள் தொழிலாளர்கள் மூலம் மணல் மூட்டைகளை அடுக்கும் பணிகள் நடைபெற்றது. இதனை ஊராட்சி மன்ற தலைவர் மீனாள்அயோத்தி ராஜா உள்ளிட்டோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அறந்தாங்கி பகுதியில் நேற்று முன்தினம் இரவு பரவலாக மழை பெய்தது. நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மேலும் மழை தூறியபடி இருந்தது. அறந்தாங்கி சந்தையில் மழையினால் சேறும்- சகதியுமாக காணப்பட்டது. இதனால், பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமல் தவித்தனர். வியாபாரிகளும் வேறு வழியின்றி ஓரமாக கடைகள் அமைத்து வியாபாரத்தில் ஈடுபட்டனர். அறந்தாங்கி மூக்குடி சாலையில் மழைநீர் குளம் போல தேங்கியது. இதனால், இரு சக்கர வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலை காணப்பட்டது.
Tags:    

Similar News