செய்திகள்
கவிஞர் பிறைசூடன்

கவிஞர் பிறைசூடன் மாரடைப்பால் காலமானார் -திரையுலகினர் இரங்கல்

Published On 2021-10-08 20:00 IST   |   Update On 2021-10-08 20:00:00 IST
2000க்கும் அதிகமான பாடல்களை எழுதி ரசிகர்களை மகிழ்வித்த பிறைசூடன், 1991, 1996 ஆகிய ஆண்டுகளில் தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியருக்கான விருது பெற்றவர்.
சென்னை:

பிரபல திரைப்பட பாடலாசிரியரும், கவிஞருமான பிறைசூடன் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 65. 

திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் 1956 ஆம் ஆண்டு பிப்ரவரி 6 ஆம் தேதி பிறந்தவர் பிறைசூடன். 1985-ல் வெளியான ‘சிறை’ படத்தில் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்த ‘ராசாத்தி ரோசாப்பூ’ என்னும் பாடலை எழுதியதன் மூலமாக தமிழ்த்திரையுலகில் பாடலாசிரியராக தனது பயணத்தை தொடங்கினார்.

பணக்காரன் திரைப்படத்தில் இவர் எழுதிய ‘நூறு வருஷம் இந்த மாப்பிளையும் பொண்ணுந்தான்’, செம்பருத்தி திரைப்படத்தில் ‘நடந்தால் இரண்டடி’  உள்ளிட்ட பாடல்கள் மிகவும் பிரபலமானவை. 

திரைப்பட பாடல்கள் மட்டுமல்லாது தனிப்பாடல்கள், கவிதைகள் உள்ளிட்டவற்றையும் எழுதியுள்ளார்.



2000க்கும் அதிகமான பாடல்களை எழுதி ரசிகர்களை மகிழ்வித்தவர் பிறைசூடன். 5000-க்கும் அதிகமான பக்தி பாடல்களையும் எழுதி உள்ளார். திரைப்பட எழுத்தாளர் சங்க செயலாளராக பதவி வகித்துள்ளார். 1991, 1996 ஆகிய ஆண்டுகளில் தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியருக்கான விருது, தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத்தின் கலைச்செல்வம் விருது,  2015ல் தமிழக அரசின் கபிலர் விருது பெற்றிருக்கிறார்.

இந்த நிலையில் இன்று மாலை நெசப்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் பிறைசூடன் காலமானார். மாரடைப்பு காரணமாக அவர் இறந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது மறைவு செய்தி வெளியானதையடுத்து திரையுலகத்தினர் மற்றும் பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Similar News