2025 - ஒரு பார்வை

2025 REWIND: ஜி.எஸ்.டி. வரிக்குறைப்பால் மகிழ்ச்சி அடைந்த நடுத்தர வர்க்கத்தினர்

Published On 2025-12-22 15:10 IST   |   Update On 2025-12-22 15:10:00 IST
  • ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டபோது சில பொருட்களின் விலைகள் உயர்ந்தன.
  • இந்தியர்களின் சேமிப்பு வீதம் தொடர்ந்து குறைந்து, கடன் சுமை அதிகரித்து வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

ஜிஎஸ்டி (GST) வரியை மத்திய அரசு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், அப்போதைய நிதியமைச்சர் அருண் ஜெட்லி மசோதாவை தாக்கல் செய்தார்.

 

நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பு நடைமுறையைக் கொண்டுவரும் நோக்கத்தில் மத்திய மோடி அரசால் கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் 1-ந்தேதி புதிய சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகம் செய்யப்பட்டது. இதன் கீழ் அனைத்து வகையான பொருட்கள் மற்றும் சேவைகளுக்கும் நான்கு அடுக்குகளின் கீழ் ஒரே விதமான வரி நிர்ணயம் செய்யப்பட்டது. ஜிஎஸ்டியின் கீழ் ஒவ்வொரு மாதமும் இவ்வளவு வரி வசூல் செய்ய வேண்டும் என்று இலக்கும் நிர்ணயம் செய்யப்பட்டது.

இது மத்திய மற்றும் மாநிலங்களின் பல மறைமுக வரிகளை ஒருங்கிணைத்து, ஒரே நாடு ஒரே வரி என்ற கொள்கையை கொண்டு வந்த ஒரு பெரிய வரி சீர்திருத்தமாகும். இந்தச் சட்டம், அரசியலமைப்பின் 101-வது திருத்தத்தின் மூலம் நிறைவேற்றப்பட்டது.

 

மத்திய மற்றும் மாநில அரசுகளின் பல மறைமுக வரிகளான கலால் வரி, சேவை வரி, VAT போன்றவற்றை ஒரே வரியின் கீழ் கொண்டு வந்து வரி அமைப்பை எளிமையாக்குவது.

மத்திய ஜிஎஸ்டி (CGST), மாநில ஜிஎஸ்டி (SGST), ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி (IGST) என மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

 

ஜிஎஸ்டி கவுன்சிலால் நிர்வகிக்கப்படுகிறது, அதன் தலைவர் மத்திய நிதி அமைச்சர் ஆவார்.

மத்திய அரசு கொண்டு வந்த ஜிஎஸ்டி வரியால் மக்களுக்கு ஆரம்பத்தில் பெரும் குழப்பமும், அதிருப்தியும் ஏற்பட்டது. குறிப்பாக, வரி விகிதங்கள் அடிக்கடி மாறியது. வாகனங்கள் போன்ற பொருட்களின் விலையில் எதிர்பார்த்த அளவுக்கு குறைவு ஏற்படாதது, சிறு வணிகர்களுக்கு சிக்கல்கள், வரி செலுத்துவதில் இருந்த சிக்கல்கள் போன்ற காரணங்களால் மக்களிடமும், வணிகர்களிடமும் எதிர்ப்புகள் கிளம்பின, எனினும் காலப்போக்கில் வரி சீர்திருத்தங்கள் செய்யப்பட்டு பலரும் பயனடைந்தனர்.

ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டபோது சில பொருட்களின் விலைகள் உயர்ந்தன. சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு ஆரம்பத்தில் வரி தாக்கல் செய்வது சவாலாக இருந்தது. சொகுசுப் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு அதிக வரி விதிக்கப்பட்டது.

இந்தியர்களின் சேமிப்பு வீதம் தொடர்ந்து குறைந்து, கடன் சுமை அதிகரித்து வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. எனவே இதனை சமநிலைப்படுத்தும் நோக்கத்தில் மத்திய அரசு இந்தாண்டு பட்ஜெட்டில் ரூ.12 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வருமான வரி தள்ளுபடியை அறிவித்தது. அதன் தொடர்ச்சியாக தற்போது, ஜி.எஸ்.டி. வரியிலும் பெரிய சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 'ஜி.எஸ்.டி. 2.0' அமலுக்கு வந்ததால் பொருட்கள் விலை வெகுவாக குறைந்தது.

அதன்படி ஏற்கனவே உள்ள 5, 12, 18, 28 என்ற நான்கு வரி விகிதங்கள் மாற்றப்பட்டு, இப்போது 5 மற்றும் 18 என்ற 2 வரி விகிதங்களாக எளிமைப்படுத்தப்பட்டு உள்ளன. அதனால் 12 சதவீதத்தில் இருந்த 99 சதவீத பொருட்கள் 5 சதவீத வரிக்கும், 28 சதவீதத்தில் உள்ள 90 சதவீத பொருட்கள் 18 சதவீதத்திற்கும் வருகின்றன.

இந்த புதிய விகிதம் கடந்த செப்டம்பர் 22 முதல் அமலுக்கு வந்தது. இதையடுத்து மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்கள், மின்சாதனங்கள், வாகனங்கள் உள்ளிட்ட பல பொருட்களின் விலைகள் குறைந்தது.

உணவுப்பொருட்கள்

• 18 சதவீதம் இருந்த ரெடிமேட் பரோட்டா, 5 சதவீதத்தில் இருந்த சப்பாத்திக்கும் வரி முழுமையாக நீக்கப்பட்டுள்ளது. அதனால் அதன் விலை ஒன்றுக்கு 50 பைசா முதல் ரூ.5 வரை குறைந்தது.

 

• சாக்லெட்டுகள், பாஸ்தா, ரெடிமேட் நூடூல்ஸ் ஆகியவை 5 சதவீதத்திற்கு வந்துள்ளதால் அதன் விலையும் கணிசமாக குறைந்தது.

• பன்னீருக்கு இருந்த 5 சதவீத வரி முற்றிலும் நீக்கப்பட்டுள்ளதால், ஒரு கிலோ பன்னீர் விலை ரூ.300 ஆக இருந்தால் ரூ.15 குறைந்தது. அதே போல் நெய், வெண்ணெய் போன்ற பொருட்களுக்கு இருந்த 12 சதவீத வரி 5 ஆக குறைக்கப்பட்டு உள்ளதால், அதன் விலையும் குறைந்தது. உதாரணமாக ஒரு கிலோ நெய்-வெண்ணெய் ரூ.600 விற்பனை செய்யப்பட்டால் ரூ.40 குறைந்து ரூ.560 ஆனது.

 

• உலர் பழங்கள், நொறுக்குத்தீனி மீதான ஜி.எஸ்.டி. 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதத்திற்கு வந்து விட்டதால் விலை குறைக்கப்பட்டது. மக்களின் வீட்டு உபயோக பொருட்களான ஏ.சி., பிரிட்ஜ், வாஷிங் மெஷின், '32 இன்ச்'-க்கு மேல் உள்ள டி.வி.க்கள், 'டிஷ் வாஷர்' ஆகியவை 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீத வரிக்குள் வந்தது. இதனால் இந்த பொருட்களின் சராசரி விலையில் இருந்து 10 சதவீதம் குறைந்தது. உதாரணமாக ரூ.40 ஆயிரம் விற்ற ஏ.சி., இப்போது ரூ.4 ஆயிரம் குறைந்து ரூ.36 ஆயிரம் ஆனது.

• ஆடம்பர கார்களை தவிர 1,200 சி.சி.க்கும் குறைவாக உள்ள கார்கள் அனைத்தும் விலை குறைக்கப்பட்டது. அதன் வரி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளதால் அதன் விலைக்கு ஏற்ப விலை குறைவு இருக்கும். அதாவது ரூ.65 ஆயிரம் முதல் ரூ.3½ லட்சம் வரை கார் விலை குறையும்.

• 350 சி.சி.க்கு உட்பட்ட மோட்டார் சைக்கிள் வரி 28-ல் இருந்து 18 ஆக குறைந்தது. அதனால் அதன் விலை ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.35 ஆயிரம் வரை குறைந்தது. மின்சார வாகனங்களுக்கு ஏற்கனவே இருந்த 5 சதவீத வரி தற்போதும் தொடர்வதால் அதில் எந்த மாற்றமும் இல்லை.

• மருத்துவ உபகரணங்கள், தெர்மாமீட்டர்கள், நோய் கண்டறியும் கருவிகள், ரத்த சர்க்கரை கண்டறியும் கருவிகள், சில மருந்துகள், மாத்திரைகள் ஆகியவை 18 மற்றும் 28 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதால் அதன் விலையில் நல்ல மாற்றம் ஏற்பட்டது.

• மக்கள் பயன்படுத்தும் மூக்கு கண்ணாடிகள், லென்சுகள் ஆகியவை 28 சதவீதத்தில் இருந்து 5 சதவீதத்திற்கு வந்துள்ளதால் பெரிய விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. ரூ.1,000 ஆக இருந்தால் இப்போது அதன் விலை சராசரியாக 25 சதவீதம் அளவுக்கு குறைந்து ரூ.750 ஆகி உள்ளது.

• மாணவர்கள் பயன்படுத்தும் பென்சில், ரப்பர்கள், மேப்-புகள் ஆகியவை பூஜ்ஜிய வரிக்கு வந்து விட்டதால் அதன் விலை குறைந்தது.

• இது தவிர சோப்புகள், டூத் பேஸ்ட், ஷாம்புகள், தலைக்கு தேய்க்கும் எண்ணெய்கள் 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக மாறி இருப்பதால் குறைந்தது ரூ.6.50-ல் இருந்து ரூ.40 வரை விலை குறைந்தது. சராசரியாக 10 சதவீதம் வரை பொருட்களுக்கு ஏற்ற விலை குறைப்பு செய்யப்பட்டது.

• துணிமணிகள் ஏற்கனவே இருக்கும் 5 சதவீத வரியில் மாற்றம் இல்லையென்றாலும் ரூ.2,500 மேல் இருக்கும் ஆடைகள் 12 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதே போல் குல்ட் மெத்தைகள் போன்றவையும் வரி உயர்ந்து உள்ளதால் அதன் விலைகள் அதிகரித்துள்ளது.

 

• வீட்டு உபயோகத்திற்கு பெரிதும் தேவையான சமையல் மற்றும் சாப்பாட்டு பாத்திரங்கள் பானைகள், குக்கர், தட்டுகள், கரண்டிகள், வாணலி, டவா, அடுப்பு, கிண்ணங்கள், கண்ணாடிகள், கத்தி, மேசை கரண்டி, ஸ்பூன் வகைகள் ஆகியவற்றில் பெரும்பாலும் 12, 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதத்திற்கு வந்து விட்டதால் விலை குறைந்து உள்ளது.

• சைக்கிள்கள் 12, 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதத்திற்கு வந்து விட்டதால், சராசரியாக ஒரு சைக்கிளுக்கு விலைக்கு ஏற்ப ரூ.1,000 முதல் ரூ.3,500 வரை குறைந்தது.

• கட்டுமான பொருளான சிமெண்ட் வரி 28-ல் இருந்து 18 ஆக மாறி இருப்பதால் மூட்டைக்கு ரூ.40 வரை குறைந்தது. அதே நேரத்தில் கம்பிகள் ஏற்கனவே இருக்கும் 18 சதவீதத்தில் இருப்பதால் அதன் விலையில் மாற்றம் இல்லை.

• சிகரெட், புகையிலை, ஆடம்பர கார்கள் ஆகியவற்றின் வரி 28 சதவீதத்தில் இருந்து 40 சதவீதம் ஆகி விட்டதால் அதன் விலை எல்லாம் அதிகரித்துள்ளது.

இந்த விலை குறைப்பை கண்காணிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

பொருட்களின் விலை குறையாமல் அதிக விலை வசூலிக்கப்பட்டால் மக்கள் நேரடியாக புகார் அளிக்க நுகர்வோர் புகார் ஒருங்கிணைந்த இணையதளம் https://consumerhelpline.gov.in மற்றும் தேசிய நுகர்வோர் உதவி எண் 1800-11-4000 மற்றும் 1915 ஆகியவற்றில் சிறப்பு பிரிவு திறக்கப்பட்டு உள்ளது.

செல்போனில் இருந்து 14404 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தியும் அனுப்பலாம்.

சமீபத்திய ஜிஎஸ்டி வரி குறைப்பு பல தரப்பு மக்களிடையே, குறிப்பாக நடுத்தர வர்க்கத்தினரிடையே, உடனடி மகிழ்ச்சியையும், பொருளாதார ரீதியிலான நன்மையையும் ஏற்படுத்தி உள்ளது. 

Tags:    

Similar News