செய்திகள்
புலி

மக்களின் உயிர் முக்கியம்: ஆனால் புலியைக் கொல்வதும் தீர்வு அல்ல- கமல் ஹாசன்

Published On 2021-10-02 16:38 IST   |   Update On 2021-10-02 16:38:00 IST
ஆட்கொல்லி புலியை சுட்டு பிடித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அதிநவீன தொழில்நுட்ப உதவியுடன் பிடித்து மறுவாழ்வு அளிக்க நடவடிக்கை எடுக்கும்படி கமல் கேட்டுக்கொண்டுள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் ஹாசன் இன்று டுவிட்டரில் ‘‘மக்களின் உயிர் முக்கியம் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் புலியைக் கொல்வதும் தீர்வு அல்ல. கூடலூர் பகுதியில் சுற்றித்திரியும் T-23 புலியை அதிநவீன தொழில்நுட்ப உதவியுடன் பிடித்து மறுவாழ்வு அளிக்க நடவடிக்கை எடுக்கும்படி வனத்துறையைக் கேட்டுக்கொள்கிறேன்’’ எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக,

நீலகிரி மாவட்டம் மசினகுடி பகுதியில் கடந்த ஆண்டு  புலி ஒன்று அப்பகுதியை சேர்ந்த கெளரி என்ற பெண்ணை அடித்து கொன்றது. பின்னர் அப்பகுதியிலிருந்து கூடலூர் அருகே உள்ள தேவன் எஸ்டேட் பகுதிக்கு நகர்ந்த புலி கடந்த சில மாதங்களில் குஞ்சு கிருஷ்ணன்,  சந்திரன் ஆகிய இருவரையும்  அடித்து கொன்றது.  இதைத்தவிர அப்பகுதியில் 30-கும் மேற்பட்ட கால்நடைகளையும் கொன்றது. இந்நிலையில் இந்த ஆட்கொல்லி புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க அப்பகுதி மக்கள் பலகட்ட போராட்டங்களை மேற்கொண்டனர்.

பொதுமக்களின் வேண்டுகோளுக்கு இணங்க  புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முடிவு செய்து 3 வன கால்நடை மருத்துவக் குழு மற்றும் 100-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் புலியை தேடும் பணியில் கடந்த ஒரு வாரமாக ஈடுபட்டு வந்தனர். கடந்த 7 நாட்களாக ஆட்கொல்லி புலி வனத்துறையினருக்கு பலமுறை தென்பட்ட போதிலும் அடர்ந்த புதர்களில் மறைந்து கொண்டு வனத்துறையினருக்கு போக்கு காட்டி வந்தது.



இந்நிலையில் நேற்று இந்த ஆட்கொல்லி புலி தேவன் எஸ்டேட் பகுதியிலிருந்து மசினகுடி பகுதிக்கு நகர்ந்ததாக வனத்துறையினர்க்கு  தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக மசினகுடி பகுதியில் வனத்துறையினர் முகாமிட்டனர். இந்நிலையில் ஆட்கொலி புலி மசினகுடி அருகே உள்ள சிங்காரா வனப்பகுதியில்  கால்நடை  மேய்த்துக் கொண்டிருந்த மங்கள பசுவன் என்பவரை அடித்து கொன்றது. இதனைதொடர்ந்து புலியை சுட்டு பிடிக்க கோரி பொதுமக்கள் மசினகுடி பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் புலியை சுட்டு பிடிக்க உத்தரவு ஆணையை  காண்பித்த பிறகு மக்கள் கலைந்து சென்றனர்.

ஆட்கொல்லி புலியை  தேட 6 பேர் கொண்ட 3 வன குழுவினர் வனப்பகுதிக்குள் சென்றுள்ளனர். இந்தக் குழு புலியை கண்டவுடன் சுட்டுக்கொல்ல திட்டமிட்டுள்ளனர்.

Similar News