செய்திகள்
கைது

ரெயிலில் கஞ்சா கடத்திய 2 வாலிபர்கள் கைது

Published On 2021-09-30 07:37 GMT   |   Update On 2021-09-30 07:37 GMT
ஈரோட்டில் ரெயிலில் கஞ்சா கடத்திய 2 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 17 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
ஈரோடு:

ஈரோடு வழியாக செல்லும் ரெயில்களில் கஞ்சா, ரேஷன் அரிசிகள் கடத்தப்பட்டு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து ரெயில்வே துணை போலீஸ் சூப்பிரண்டு யாஸ்மின் ஆலோசனையின்பேரில் ரெயில்வே போலீசார் ரெயில்களில் ஏறி தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தநிலையில் சண்டிகரில் இருந்து மதுரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் ஈரோட்டுக்கு நேற்று வந்தது. ஈரோடு ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் தலைமையில் போலீஸ் ஏட்டுகள் கண்ணன், ஜெகதீஸ், போலீஸ்காரர் ரவிக்குமார் ஆகியோர் ரெயிலில் சோதனை நடத்தினார்கள். அப்போது பயணிகளின் இருக்கைக்கு அடியில் மூட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த மூட்டைகளை போலீசார் பார்த்தபோது அதில் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், தர்மபுரி மாவட்டம் கோபால்புரத்தை சேர்ந்த குமாரின் மகன் சரவணகுமார் (வயது 25), சரவணனின் மகன் சரத்குமார் (25) ஆகியோர் ஆந்திரா மாநிலம் விஜயவாடாவில் இருந்து திண்டுக்கல்லுக்கு கஞ்சாவை கடத்தி சென்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 17 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News