செய்திகள்
பானிபூரி

ஈரோட்டில் பானிபூரி சாப்பிட்ட பட்டதாரி இளம்பெண் பலி

Published On 2021-09-25 15:37 IST   |   Update On 2021-09-25 15:37:00 IST
ஈரோட்டில் பானிபூரி சாப்பிட்ட ஒரு பட்டதாரி இளம்பெண் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு:

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உள்ள ஒரு ஓட்டலில் சிக்கன் பிரியாணி சாப்பிட்ட 10 வயது சிறுமி பலியானார். இதையடுத்து குளிர்பானம் குடித்த ஒரு சிறுமி ரத்த வாந்தி எடுத்தார்.

இந்த சம்பவத்தையடுத்து தமிழகம் முழுவதும் உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்தனர். அதன்படி அவர்கள் உணவகங்களில் திடீர் ஆய்வு செய்து சோதனை நடத்தினர். இதில் கெட்டுப்போன உணவுகள் மற்றும் பழைய இறைச்சிகளை பறிமுதல் செய்து அழித்தனர்.

இந்த நிலையில் ஈரோட்டில் பானிபூரி சாப்பிட்ட ஒரு பட்டதாரி இளம்பெண் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு என்.ஜி.ஜி.ஓ. காலனி காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் கல்யாண சுந்தரம், இவரது மகள் ரோகிணி தேவி (34). பட்டதாரி இளம்பெண்ணான இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

நேற்று முன்தினம் ரோகிணி தேவிக்கு அவரது அண்ணன்கள் பாலமுருகன், யுவராஜ் ஆகியோர் பானிபூரி வாங்கி கொண்டு வந்தனர். இதை சாப்பிட்ட ரோகிணி தேவி அரைமணி நேரத்தில் வாந்தி எடுத்து உள்ளார்.

பின்னர் ரோகிணி தேவி எலக்ட்ரோல் பவுடரை தண்ணீரில் கலந்து குடித்து விட்டு இரவில் படுக்க சென்றார். தொடர்ந்து நேற்று காலை 7.30 மணியளவில் வழக்கம் போல் எழுந்தார். அப்போது குளியல் அறைக்கு சென்று விட்டு திரும்பி வந்த ரோகிணி சோர்வாக காணப்பட்டார்.

இதையடுத்து ஆஸ்பத்திரிக்கு அவரை அழைத்து செல்ல முடிவு செய்தனர். அப்போது திடீரென ரோகிணி மயக்கம் அடைந்தார். இதையடுத்து ஆம்புலன்சு முலம் அவரை ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

ரோகிணி ஆபத்தான நிலையில் இருந்ததால் அவரை சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அப்போது அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே ரோகிணி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து ரோகிணியின் தந்தை கல்யாண சுந்தரம் வீரப்பன் சத்திரம் போலீசில் புகார் செய்தார். அதில் பானிபூரி சாப்பிட்டு சிறிது நேரத்தில் தனது மகள் வாந்தி எடுத்ததாகவும், அதை தொடர்ந்து அவர் இறந்து விட்டதாகவும் தெரிவித்து இருந்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது:- பெண்ணின் உறவினர்கள் பானிபூரி சாப்பிட்டதால் இறந்து விட்டதாக தெரிவித்து உள்ளனர். எனவே பிரேத பரிசோதனை அறிக்கையில் வரும் தகவலின் அடிப்படையில் மேல்விசாரணை நடத்தப்படும். மேலும் பானிபூரி எந்த கடையில் வாங்கப்பட்டது என்பது குறித்தும் விசாரணை நடத்தப்படும் என்றனர்.

பானிபூரி சாப்பிட்டு இளம்பெண் பலியான சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News