செய்திகள்
மழை

டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் தகவல்

Published On 2021-09-18 07:57 GMT   |   Update On 2021-09-18 09:19 GMT
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை:

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறியதாவது:-

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

இன்று டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யும்.

தென் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழையும், மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்கள், வட கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள்மாவட்டங்கள், புதுவை பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும்.

நாளை 19-ந் தேதி திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கன மழையும், ஏனய மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

20-ந் தேதி தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதியில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யும்.


21-ந் தேதி தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பெய்யும்.

22-ந் தேதி சேலம், திருவண்ணாமலை, வேலூர், கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, திருவள்ளூர், நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழையும் பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருவாடனை 12 செ.மீ., தொண்டி 11 செ.மீ., பெருங்களூர் 10 செ.மீ., கள்ளிக்குடி 9 செ.மீ., விராலிமலை, காரியாப்பட்டி தலா 7 செ.மீ., மழை பெய்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News