செய்திகள்
பள்ளி மாணவிகள்

8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு எப்போது?- பெற்றோர் எதிர்பார்ப்பு

Published On 2021-09-15 02:37 GMT   |   Update On 2021-09-15 02:37 GMT
தமிழகத்தில் பள்ளிகளை திறக்க நடவடிக்கை சூடு பிடித்துள்ள நிலையில் புதுவையிலும் பள்ளிகளை திறக்கவேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
புதுச்சேரி:

புதுவையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளிகள் கடந்த பிப்ரவரி மாதம் மூடப்பட்டன. இந்த நிலையில் தொற்று பாதிப்பு குறைந்ததால் கடந்த 1-ந்தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. 9, 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு ஒருநாள்விட்டு ஒருநாள் என வாரத்தில் 3 நாட்கள் சுழற்சி முறையில் வகுப்புகள் மதியம் வரை நடத்தப்பட்டு வருகிறது.

அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு மாணவ, மாணவிகள் தவறாமல் வந்து செல்கின்றனர். இதுவரை பள்ளி மாணவர்கள் 3 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதுவும் கரையாம்புத்தூர் பகுதியில் நடந்த சுப நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டதால் அவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பிற வகையில் மாணவர்களுக்கு பாதிப்பு ஏதும் ஏற்பட்டதாக தெரியவில்லை.

இதற்கிடையே தனியார் மற்றும் அரசுப்பள்ளிகளில் மற்ற வகுப்புகளை தொடங்கலாமா? என்று கருத்து கேட்கப்பட்டுள்ளது. அதில் பெற்றோர்கள் ஒருசிலரை தவிர மற்றவர்கள் அனைவரும் பள்ளிகளை திறக்கவேண்டும் என்றே கூறியுள்ளனர்.

தனியார் பள்ளி ஆசிரியர்கள் பலரும் பள்ளிகளை திறக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால் ஒரு சில அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மட்டும் பள்ளிகளை தற்போதைக்கு திறக்கவேண்டாம் என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் தமிழகத்தில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகளை திறப்பது தொடர்பாக இன்று அரசுக்கு அறிக்கை அளிக்கப்பட உள்ளதாக தமிழக கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பள்ளிகளை திறக்க நடவடிக்கை சூடு பிடித்துள்ள நிலையில் புதுவையிலும் பள்ளிகளை திறக்கவேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

ஆனால் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் புதுவையிலும் பள்ளிகளை திறக்க வேண்டும் என்று பெற்றோர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News