செய்திகள்
தொடர் விடுமுறை எதிரொலியால் ஊட்டி தாவரவியல் பூங்காவில் குவிந்துள்ள சுற்றுலா பயணிகள்.

கடந்த 2 நாட்களில் மட்டும் நீலகிரி சுற்றுலா தலங்களை 20 ஆயிரம் பேர் கண்டு ரசித்தனர்

Published On 2021-09-12 09:03 GMT   |   Update On 2021-09-12 09:03 GMT
சுற்றுலா பயணிகள் வருகையால் மேட்டுபாளையம்- ஊட்டிசாலை, மேட்டுபாளையம்- கோத்தகிரி சாலைகளில் வாகன போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.
ஊட்டி:

இயற்கை காட்சிகளும், எண்ணற்ற சுற்றுலா தலங்களும் நிறைந்த பகுதியாக உள்ளது நீலகிரி மாவட்டம். மாவட்டத்தின் இயற்கை அழகை ரசிக்கவும், சுற்றுலா தலங்களை சுற்றி பார்க்கவும் நாள்தோறும் நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.

கொரோனாவால் மூடப்பட்டிருந்த சுற்றுலா தலங்கள் கடந்த மாதம் 23-ந் தேதி முதல் திறக்கப்பட்டு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது. இதனால் அதனை நம்பி தொழில் செய்து வந்த வியாபாரிகளும், விடுதிகளும் மீண்டும் புத்துயிர் பெற்றன.

தற்போது விநாயகர் சதுர்த்தி, சனி, ஞாயிறு என தொடர்ச்சியாக 3 நாட்கள் விடுமுறை காரணமாக நீலகிரிக்கு தமிழகத்தின் பிற மாவட்டங்களான சென்னை, கோவை, திருச்சி, மதுரை, திருப்பூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்தனர்.

நேற்று முன்தினம் காலையில் இருந்து ஏராளமான வாகனங்கள் ஊட்டி நகருக்குள்ளும், புறநகர் பகுதிகளான கோத்தகிரி, குன்னூர், கூடலூர் பகுதிகளில் உள்ள சுற்றுலா தலங்களுக்கும் படையெடுத்து வர தொடங்கின.

நேற்று காலையும் தொடர்ந்து கார்கள், மோட்டார் சைக்கிள்கள், வேன்கள் போன்ற வாகனங்களில் சுற்றுலா பயணிகள் நீலகிரிக்கு வந்தனர். அவர்கள் தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, படகு இல்லம், முதுமலை புலிகள் காப்பகத்திற்கு சென்று சுற்றி பார்த்து, அங்கு மலர்செடிகளை கண்டு ரசித்து குடும்பத்துடன் புகைப்படம் எடுத்து மகிழ்ச்சியடைந்தனர்.

சுற்றுலா பயணிகள் வருகையால் மேட்டுபாளையம்- ஊட்டிசாலை, மேட்டுபாளையம்- கோத்தகிரி சாலைகளில் வாகன போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.

விடுமுறை நாளான கடந்த 2 நாட்களில் மட்டும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களை 20 ஆயிரம் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்துள்ளதாக சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்னர். தொடர்ந்து அதிகரித்துள்ள சுற்றுலா பயணிகள் எண்ணிக்கையால் வியாபாரிகள், ஓட்டல்கள், சாலையோர வியாபாரிகள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Tags:    

Similar News