செய்திகள்
புதுச்சேரி

புதுவையில் தளர்வுகளுடன் ஊரடங்கு வருகிற 15-ந் தேதி வரை நீட்டிப்பு

Published On 2021-09-01 10:09 GMT   |   Update On 2021-09-01 10:47 GMT
இறுதிச்சடங்கில் 20 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி:

புதுவையில் கொரோனா பரவலை தடுக்க தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது.

கடந்த மாதம் 15-ந் தேதி பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு நேற்று நள்ளிரவோடு முடிவுக்கு வந்தது.

இதைத்தொடர்ந்து வருகிற 15-ந் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.

இதன்படி இரவு 10.30 மணி முதல் மறுநாள் காலை 5 மணிவரை ஊரடங்கு தொடர்கிறது. சமூக, பொழுதுபோக்கு நிகழ்ச்சிக்காக கூடுவது தடை செய்யப்படுகிறது.

அனைத்து துறை அதிகாரிகளும் தங்களின் கீழ் பணியாற்றும் தகுதியான ஊழியர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தியதை உறுதி செய்ய வேண்டும். கல்வி நிறுவனங்கள் விதிமுறைகளை பின்பற்றி செயல்படலாம்.

அனைத்து கடைகளும் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்கலாம். காய்கறி, பழக்கடைகள் காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்கலாம். தனியார் நிறுவனங்கள் காலை 9 முதல் மாலை 6 மணி வரை இயங்கலாம். ஓட்டல்கள், விடுதிகள், உணவகங்கள் 50 சதவீத அனுமதியுடன் இரவு 10 மணி வரை இயங்கலாம்.

சில்லரை மதுபானம், சாராய கடைகள் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்கலாம். கலால்துறை விதிகளுக்கு உட்பட்டு வீடுகளுக்கு மதுபானங்களை விநியோகம் செய்து மதுக்கடைகளில் கூட்டத்தை தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொது போக்குவரத்து இரவு 9 மணி வரை இயங்கலாம். கடற்கரை சாலை, பூங்காக்கள் காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறக்கலாம்.



வழிபாட்டு தலங்கள் இரவு 9 மணி வரை திறக்கலாம். கோவில் திருமண நிகழ்ச்சியில் 25 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும். திருமண விழாக்களில் 100 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும்.

இறுதிச்சடங்கில் 20 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதற்கான உத்தரவை அரசு செயலர் அசோக்குமார் வெளியிட்டுள்ளார்.


Tags:    

Similar News