செய்திகள்
சபாநாயகர் செல்வத்தை சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்ட காட்சி.

திடீர் நெஞ்சுவலியால் சபாநாயகர் செல்வம் ஆஸ்பத்திரியில் அனுமதி

Published On 2021-09-01 03:06 GMT   |   Update On 2021-09-01 03:06 GMT
சபாநாயகர் செல்வம் மேல்சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
புதுச்சேரி:

புதுச்சேரி சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. 4-வது நாளாக நேற்று கூட்டத்தில் கலந்து கொள்ள சபாநாயகர் செல்வம் சட்டசபைக்கு நேற்று காலை காரில் வந்தார். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.

உடனே அவரது பாதுகாப்பு அதிகாரி செல்வத்தை புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு அந்த காரிலேயே அழைத்துச் சென்றார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். அவரை யாரும் பார்க்க அனுமதி வழங்கப்படவில்லை.

ஆஸ்பத்திரியில் சபாநாயகர் செல்வம் அனுமதிக்கப்பட்ட தகவல் அறிந்து கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம், தமிழ் மாநில பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ஆகியோர் அங்கு வந்து செல்வத்தை பார்வையிட்டு உடல்நலம் விசாரித்தனர். அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தனர்.

இந்தநிலையில் புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட சபாநாயகர் செல்வம் நேற்று பகல் 11.30 மணியளவில் மேல்சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சபாநாயகர் செல்வத்திற்கு ஏற்கனவே ஒரு முறை நெஞ்சுவலி ஏற்பட்டு சிகிச்சை பெற்றது குறிப்பிடத்தக்கது.

சபாநாயருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் நேற்று சட்டசபை கூட்டத்தை துணை சபாநாயகர் ராஜவேலு நடத்தினார்.
Tags:    

Similar News