செய்திகள்
ஊட்டி மார்க்கெட்டில் போலீசார் குவிக்கப்பட்டிருந்த காட்சி

கடைகளை சீல் வைக்க எதிர்ப்பு: ஊட்டி மார்க்கெட்டில் வியாபாரிகள் உள்ளிருப்பு போராட்டம்

Published On 2021-08-25 14:21 IST   |   Update On 2021-08-25 14:21:00 IST
ஊட்டி மார்க்கெட்டில் வியாபாரிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் இன்று காலை ஊட்டி மார்க்கெட் பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

ஊட்டி:

ஊட்டி நகரசபை மார்க்கெட்டில் 1587 கடைகள் செயல்பட்டு வருகின்றன. கடந்த 4 ஆண்டுகளாக கடை உரிமையாளர்கள் பலர் நகரசபைக்கு செலுத்த வேண்டிய வாடகையை செலுத்தாமல் உள்ளதால் ரூ.38 கோடி வாடகை நிலுவைத் தொகையாக உள்ளது.

இதனால் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வது, பணியாளர்களுக்கு ஊதியம் வழங்குவது போன்றவற்றில் நகரசபைக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக ஆணையாளர் சரஸ்வதி தெரிவித்தார். மேலும் நகரசபைக்கு வாடகை செலுத்தாத 1395 கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என ஆணையாளர் எச்சரிக்கை விடுத்தார்.

இந்தநிலையில் நேற்று வாடகை செலுத்தாத கடைகளுக்கு சீல் வைப்பதற்காக பாதுகாப்பு வழங்க வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத்திடம் நகரசபை சார்பில் அனுமதி கேட்கப்பட்டது.

இதையறிந்த வியாபாரிகள் நகரசபையின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஊட்டி நகரசபை மார்க்கெட்டில் திரண்டனர். கடைகளை அடைக்கக் கூடாது என கூறி அவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நேற்று மாலை முதலே ஊட்டியில் பரபரப்பு நிலவி வந்தது.

இந்தநிலையில் இன்று காலை ஊட்டி மார்க்கெட் பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். நகரசபை ஆணையாளர் சரஸ்வதி மற்றும் அதிகாரிகள் கடைகளுக்கு சீல் வைப்பதற்காக சென்றனர்.

அப்போது வியாபாரிகள் கடைகளுக்குள் சென்று அதிகாரிகள் சீல் வைக்க முடியாதவாறு நின்று கொண்டனர். மேலும் அதிகாரிகளை முற்றுகையிட்டு வியாபாரிகள் உள்ளிருப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இதுபற்றி வியாபாரிகள் கூறுகையில் எங்களது கோரிக்கையை தமிழக அரசிடம் தெரிவித்துள்ளோம். அரசு கோரிக்கையை பரிசீலிப்பதாக கூறி உள்ளது.

ஆனால் நகரசபை ஆணையாளரின் இந்த அராஜகப்போக்கு காரணமாக ஒட்டுமொத்த வியாபாரிகளின் வாழ்வாதாரமே கேள்விக் குறியாகி உள்ளது என தெரிவித்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகளுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

Similar News