செய்திகள்
சீர்காழியில் கூடுதல் ஆதார் மையங்கள் திறக்க பொதுமக்கள் கோரிக்கை
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பழைய தாலுகா அலுவலக வளாகம் சீர்காழி நகராட்சி அலுவலக வளாகம் ஆகிய இடங்களில் அரசு ஆதார் சேவை மையம் இயங்கி வருகிறது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பழைய தாலுகா அலுவலக வளாகம் சீர்காழி நகராட்சி அலுவலக வளாகம் ஆகிய இடங்களில் அரசு ஆதார் சேவை மையம் இயங்கி வருகிறது. நாள் ஒன்றுக்கு நூற்றுக்கணக்கானோர் வந்து செல்லும் நிலையில் இங்கு போதிய ஊழியர்கள் இல்லாததால் பொதுமக்கள் மணிக்கணக்கில் காத்து நிற்க வேண்டிய நிலை உள்ளது. இணைய சேவை குறைபாட்டால் ஒரு கணினி மட்டுமே இயங்குவதால் நாள் முழுவதும் காத்திருந்தாலும் பணிகள் முடிவடையாத நிலை உள்ளது. சில நேரங்களில் 3 நாட்கள் அலைந்துதான் ஆதார் சேவை மற்றும் திருத்தங்களை செய்ய முடிகிறது என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் கிராம புறங்களில் இருந்து வரும் முதியோர், மகளிர் கடும் அவதியடைகின்றனர். சமூக இடைவெளியின்றியும் முக கவசம் இன்றியும் கூட்டமாக நிற்கின்றனர். கடும் வெயிலில் திறந்த வெளியில் காத்து கிடக்கும் நிலை உள்ளது. எனவே பொதுமக்கள் நலன்கருதி கூடுதல் ஆதார் மையங்களை திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.