செய்திகள்
சுஹாஞ்சானா

இறைவனுக்காக பாடுவது மகிழ்ச்சி: முதல் பெண் ஓதுவார் பேட்டி

Published On 2021-08-16 02:17 GMT   |   Update On 2021-08-16 02:17 GMT
சென்னையை அடுத்த தாம்பரம் அருகே உள்ள மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் கோவிலில் ஓதுவாராக பணிபுரிய முதல் முறையாக சுஹாஞ்சனா என்ற 28 வயது பெண் நியமிக்கப்பட்டார்.
சென்னை :

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அரசாணையின் கீழ் கோவில் அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் பயின்று தேர்வு செய்யப்பட்ட அனைத்து சாதியினை சேர்ந்த 24 அர்ச்சகர்கள், பூசாரிகள், பட்டாச்சாரியார்கள், ஓதுவார்கள் உள்ளிட்டோருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

இதில் சென்னையை அடுத்த தாம்பரம் அருகே உள்ள மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் கோவிலில் ஓதுவாராக பணிபுரிய முதல் முறையாக சுஹாஞ்சனா என்ற 28 வயது பெண் நியமிக்கப்பட்டார்.

இதற்காக முதல்-அமைச்சரிடம் இருந்து பணி நியமன ஆணையை பெற்ற அவர், நேற்று மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் கோவிலில் தனது ஓதுவார் பணியை தொடங்கினார்.

தாம்பரம் அடுத்த சேலையூர் ஐ.ஏ.எப். சாலையில் கணவர் கோபிநாத், மகள் வன்ஷிகாசக்தி, மாமனார் பரமசிவம், மாமியார் லட்சுமி ஆகியோருடன் வசித்து வரும் சுஹாஞ்சானா, முதல் பெண் ஓதுவாராக நியமிக்கப்பட்டது பற்றி கூறியதாவது:-

எங்களது சொந்த ஊர் கரூர் அருகே உள்ள வேலாயுதம்பாளையம். நான் 10-ம் வகுப்பு முடித்த பின்னர் தேவாரம் பாடுவதில் ஆர்வம் கொண்டேன். இதற்காக இசைப்பள்ளியில் படித்து கொண்டிருக்கும்போது அதில் மிகுந்த ஈடுபாடு கொண்டேன்.

பெண்கள் பல துறையில் பயணித்தாலும், ஓதுவராகவும் பணியாற்ற முடியும் என்பதால் இதில் ஆர்வமாக விண்ணப்பித்து சேர்ந்து உள்ளேன். கோவிலில் இறைவனுக்காக பாடுவது மனதுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. இந்த பணியை வழங்கிய முதல்-அமைச்சருக்கு நன்றி.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News