செய்திகள்
கொள்முதல் நிலையம் திறக்காததால் விவசாயிகள், நெல்லை சாலையில் கொட்டி மறியல் போராட்டம்
திருவாலங்காட்டில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்காததால் விவசாயிகள் நெல்லை சாலையில் கொட்டி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குத்தாலம்:
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா திருவாலங்காடு, திருவாவடுதுறை, மாம்புள்ளி உள்ளிட்ட 8 கிராமங்களில் ஆயிரம் ஏக்கருக்கு மேல் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இந்தபகுதியில் விளைவிக்கபடும் நெல்லை ஆண்டுதோறும் திருவாலங்காட்டில் திறக்கப்படும் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் விற்பனை செய்து வந்துள்ளனர்.
ஆனால் இந்த ஆண்டு அறுவடை பணிகள் நடைபெற்று வரும் நிலையில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தும் இதுவரை அரசின் நேரடி கொள்முதல் நிலையம் திருவாலங்காட்டில் திறக்கப்படவில்லை. இதனால் விவசாயிகள் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக தாங்கள் அறுவடை செய்த நெல் மூட்டைகளை கடந்த ஆண்டு நேரடி நெல் கொள்முதல் நிலையம் இயங்கிய இடத்தில் அடுக்கி வைத்து காத்திருக்கின்றனர். மழையில் இருந்து நெல்லை பாதுகாக்க தார்பாய்கள் எடுத்துவந்து மூடி வைத்துள்ளனர்..
20 நாட்களுக்கு மேலாகியும் தங்களது கோரிக்கைக்கு முடிவு கிடைக்காததால் ஆத்திரமடைந்த விவசாயிகள் நேற்று நெல்லை டிராக்டரில் ஏற்றிவந்து மயிலாடுதுறை-கும்பகோணம் நெடுஞ்சாலையில் திருவாலங்காடு கடைத்தெருவில் சாலையில் கொட்டி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த குத்தாலம் போலீசார் விரைந்து வந்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் கொள்முதல் நிலையம் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை அடுத்து விவசாயிகள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.