செய்திகள்
கலெக்டர் லலிதா, ஒரு பெண்ணுக்கு ஊட்டச்சத்து உணவுகள் அடங்கிய தொகுப்பினை வழங்கிய போது எடுத்த படம்.

அரசு மருத்துவமனையில் தாய்மார்கள், தாய்ப்பால் தானம் வழங்கலாம் - கலெக்டர் வேண்டுகோள்

Published On 2021-08-07 19:45 IST   |   Update On 2021-08-07 19:45:00 IST
மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில், தாய்மார்கள் தாமாக முன்வந்து தாய்ப்பால் தானம் வழங்கலாம் என்று கலெக்டர் லலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மயிலாடுதுறை:

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் மருத்துவமனை சார்பில் உலக தாய்ப்பால் வார விழா நடந்தது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் லலிதா தலைமை தாங்கினார். விழாவில் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து உணவுகள் அடங்கிய தொகுப்பினை வழங்கி கலெக்டர் பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், உலக தாய்ப்பால் வார விழாவில் கலந்து கொள்வது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. பிறந்த குழந்தைக்கு தொடர்ந்து 6 மாத காலம் தாய்ப்பால் வழங்குவதால், குழந்தைக்கும், தாய்க்கும் நல்ல உடல் ஆரோக்கியம் பெறும். அந்த காலகட்டத்தில் தாய்மார்கள் சத்தான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

குறிப்பாக குழந்தைகளை ஒவ்வொரு தாய்மார்களும் பாதுகாப்பாக கவனித்து கொள்ள வேண்டும். மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் தாய்ப்பால் இருப்பு வங்கி தொடங்கப்பட்டுள்ளது. தாய்ப்பால் அதிகம் சுரக்கக்கூடிய தாய்மார்கள் தாமாக முன்வந்து தாய்ப்பால் தானம் வழங்கலாம். இதன் மூலம் தாய்ப்பால் குறைவாக உள்ள தாய்மார்களின் குழந்தைக்கு தாய்ப்பால் வழங்கப்படும். மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனைத்து வசதிகளும் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகிறது.

எனவே உலக தாய்ப்பால் வார விழாவின் மூலம் பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் வழங்குவதன் அவசியத்தை தாய்மார்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்றார்.

விழாவில் மயிலாடுதுறை அரசு மருத்துவமனை தலைமை டாக்டர் ராஜசேகரன் மற்றும் டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

Similar News