செய்திகள்
கோப்புபடம்

மயிலாடுதுறையில் சீர்காழி சுகாதார ஆய்வாளரை காரில் கடத்தி தாக்கிய 2 பேர் கைது

Published On 2021-08-06 17:18 IST   |   Update On 2021-08-06 17:18:00 IST
மயிலாடுதுறையில் சீர்காழி சுகாதார ஆய்வாளரை காரில் கடத்தி தாக்குதல் நடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 4 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
மயிலாடுதுறை:

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 57). இவர் சீர்காழி நகராட்சி அலுவலகத்தில் சுகாதார ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். கடந்த 2-ந் தேதி மன்னார்குடியில் இருந்து சீர்காழிக்கு ராஜேந்திரன் பஸ்சில் சென்றுள்ளார். மயிலாடுதுறை பஸ் நிலையத்தில் இறங்கி சீர்காழி பஸ் ஏற சென்ற ராஜேந்திரனை மர்ம நபர்கள் அவரை காரில் கடத்தி சென்றனர்.

அப்போது கூச்சலிட முயன்ற ராஜேந்திரனை தொடையில் கத்தியால் குத்தி உள்ளனர். தொடர்ந்து கடத்தப்பட்ட ராஜேந்திரனை அடித்து தாக்கிய மர்ம கும்பல் பின்னர் அவரை மன்னார்குடி அருகில் விட்டுச் சென்று விட்டனர். காயமடைந்த ராஜேந்திரன், மன்னார்குடியில் சிகிச்சை பெற்றார்.

இந்த சம்பவம் தொடர்பாக ராஜேந்திரன், மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ராஜேந்திரனுக்கும் அவரது உறவினர் இளங்கோவனுக்கும் இடப்பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது. இந்த முன்விரோதம் காரணமாக இளங்கோவன் தனது கூட்டாளியான விக்கி என்கிற விக்னேஷ் மூலம் கூலிப்படையினரை நியமித்து ராஜேந்திரனை கடத்தி தாக்கியது தெரியவந்தது.

இதையடுத்து இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட கும்பகோணம் கீழகொட்டையூர் ராஜேந்திரன் மகன் ராகுல் (வயது 22), திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி வெண்ணவாசல் பகுதியை சேர்ந்த காமராஜ் மகன் கார்த்திகேயன் (27) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக இளங்கோவன், விக்கி என்கிற விக்னேஷ், பரத், விஷ்ணுராம் ஆகிய 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Similar News