திருவண்ணாமலை மாவட்டத்தில் விடிய விடிய பலத்த மழை - ஆரணியில் விளைநிலங்களில் தண்ணீர் புகுந்ததால் பயிர்கள் சேதம்
திருவண்ணாமலை :
வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பருவமழை பெய்து வருகிறது.நேற்று இரவு முதல் இன்று காலை வரை விடிய விடிய மழை பெய்தது.
கனமழையால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தாழ்வான குடியிருப்புகளை மழை வெள்ளம் சூழ்ந்தது. விவசாய நிலங்களிலும் மழை நீர் நிரம்பியது. பகலில் வெயில் அதிகமாக இருந்த நிலையில் இரவில் பெய்த மழை வெப்பத்தை தணிய வைத்ததால் இதமான குளிர் காற்று வீசியது.
திருவண்ணாமலையில் இரவில் பெய்த மழையால் ஏரி மற்றும் குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கோடை வெயிலில் வறண்ட குளங்கள் நிரம்பி வருகின்றன.
மராமத்து பணிகள் எதுவும் செய்யாத நிலையில் மழை பெய்து வருவதால் மழைநீரை உரிய முறையில் சேமிக்க முடியாத நிலை உள்ளது.
திருவண்ணாமலையில் கிரிவலப்பாதையில் தங்கியிருக்கும் சாமியார்கள் தொடர் மழை காரணமாக நிழற்குடைகளில் தஞ்சமடைந்துள்ளனர். பலர் தூங்க முடியாமல் அவதிப்பட்டனர். மேலும் கோவில், பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் தங்கியிருக்கும் ஆதரவற்ற நபர்களும் தவித்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி, போளூர், சேத்துப்பட்டு, செங்கம், வந்தவாசி, செய்யாறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.
ஆரணியில் 115.5 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இரவு முதல் விடிய விடிய மழை பெய்ததால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.
காமக்கூர்பாளையம் கிராமத்தில் அறுவடைக்கு தயாரான விளைநிலத்தில் மழை வெள்ளம் தேங்கி நின்றதால் நெற்பயிர்கள் சேதடைந்துள்ளது.
வேலூர் மாவட்டத்தில் வேலூர், குடியாத்தம், அணைக்கட்டு, பேரணாம்பட்டு, காட்பாடி பகுதிகளில் இரவு முழுவதும் பரவலாக மழை பெய்தது.காலையிலும் மழை விட்டு விட்டு பெய்தது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், ஆம்பூர், வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, நாட்டறம்பள்ளியில் இரவில் தொடங்கிய மழை விடிய, விடிய பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ராணிப்பேட்டை, வாலாஜா, ஆற்காடு, அரக்கோணம், சோளிங்கர், காவேரிப்பாக்கம், பனப்பாக்கம் பகுதிகளில் விடிய விடிய பரவலாக மழை பெய்தது.