செய்திகள்
மயிலாடுதுறை உரக்கிடங்கில் மாவட்ட கலெக்டர் லலிதா ஆய்வு செய்தபோது எடுத்தபடம்.

மயிலாடுதுறையில் ரூ.2¼ கோடியில் குப்பைகளை தரம் பிரித்து உரமாக்கும் பணி - கலெக்டர் லலிதா ஆய்வு

Published On 2021-07-08 22:11 IST   |   Update On 2021-07-08 22:11:00 IST
மயிலாடுதுறையில் ரூ.2¼ கோடி மதிப்பீட்டில் நடந்து வரும் குப்பைகளை தரம் பிரித்து உரமாக்கும் பணியை கலெக்டர் லலிதா ஆய்வு செய்தார்.
மயிலாடுதுறை:

மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளிலும் சேகரிக்கப்படும் குப்பைகள் ஆனதாண்டவபுரம் சாலையில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான உரக்கிடங்கில் சேகரிக்கப்படுகின்றன. இங்கு சேகரிக்கப்பட்ட குப்பைகள் உரமாக மாற்றப்படுவது வழக்கம். கடந்த சில ஆண்டுகளாக அதிக அளவில் குப்பைகள் சேகரிக்கப்பட்டு குப்பைகள் மலைபோல் தேங்கி கிடந்தன. இதனை மேலாண்மை செய்ய முடியாமல் நகராட்சி அதிகாரிகள் சிரமப்பட்டு வந்தனர்.

இந்த நிலையில் சிறப்பு திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின்கீழ் ரூ.2 கோடியே 10 லட்சம் மதிப்பீட்டில் பழைய குப்பைகளை தரம் பிரித்து உரமாக்கும் பணிகள் தொடங்கப்பட்டது. அதற்காக எந்திரங்கள், கட்டிடங்கள் உள்ளிட்ட கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, தற்போது குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து எடுக்கும் பணி நடந்து வருகிறது.

இந்த திட்டத்தின்படி 32 ஆயிரத்து 500 கனமீட்டர் பரப்பளவில் குப்பைகள் தரம் பிரிக்கும் பணி மேற்கொள்ள திட்டமிடப்பட்டு, இதுவரை 20 ஆயிரம் கனமீட்டர் பரப்பளவுக்கு குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு உள்ளது. பிரிக்கப்பட்ட குப்பைகள் உரமாக்கப்பட்டு விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் லலிதா ஆய்வு செய்து பழைய குப்பைகளை தரம் பிரிக்கும் பணிகளை விரைந்து முடிக்க ஆணையருக்கு உத்தரவிட்டார். ஆய்வின்போது நகராட்சி ஆணையர் சுப்பையா, உதவி பொறியாளர்கள் சந்திரசேகரன், குமார் மற்றும் நகராட்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Similar News