செய்திகள்
மழை

காலநிலை மாற்றத்தால் சராசரி மழை பொழிவு குறைந்தது- அதிகாரி தகவல்

Published On 2021-07-03 16:54 IST   |   Update On 2021-07-03 16:54:00 IST
நீலகிரியில் கடந்த ஜனவரி மாதம் 105.18 மில்லி மீட்டர், பிப்ரவரி மாதம் 25.33 மில்லி மீட்டர், மார்ச் மாதம் 28.53 மில்லி மீட்டர், ஏப்ரல் மாதம் 37 மில்லி மீட்டர், மே மாதம் 114.46 மில்லி மீட்டர், ஜூன் மாதம் 114.55 மில்லி மீட்டர் மழை சராசரியாக பெய்தது.
ஊட்டி:

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் குளிர்கால மழை, மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் கோடை மழை, ஜூன், ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் தென்மேற்கு பருவமழை, அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக காலநிலை மாற்றத்தால் மழை பெய்யும் நாட்கள் குறைந்து, குறிப்பிட்ட சில நாட்களில் மட்டும் அதிகமான மழைப்பொழிவு காணப்படுகிறது. இந்த ஆண்டில் கடந்த மாதம் முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கி பரவலாக பெய்து வருகின்றது. இருப்பினும் போதிய அளவு பெய்யவில்லை. இதனால் அணைகளில் தண்ணீர் இருப்பு குறைவாக உள்ளது.

நீலகிரியில் கடந்த ஜனவரி மாதம் 105.18 மில்லி மீட்டர், பிப்ரவரி மாதம் 25.33 மில்லி மீட்டர், மார்ச் மாதம் 28.53 மில்லி மீட்டர், ஏப்ரல் மாதம் 37 மில்லி மீட்டர், மே மாதம் 114.46 மில்லி மீட்டர், ஜூன் மாதம் 114.55 மில்லி மீட்டர் மழை சராசரியாக பெய்தது.

இதுகுறித்து பேரிடர் மேலாண்மை பிரிவு தாசில்தார் வினோத் கூறியதாவது:-

மலைமாவட்டமான நீலகிரியில் சராசரி மழை அளவு குறைந்து வருகிறது. இதற்கு காலநிலை மாற்றமே காரணம் ஆகும். கடந்த 2019-ம் ஆண்டு அவலாஞ்சியில் 1000 மில்லி மீட்டர் சராசரி மழை பதிவானது. இது அதிகமாகும். மேக வெடிப்பு காரணமாக ஒரே இடத்தில் அதிகமாக மழை பெய்கிறது.

கடந்த 2009-ம் ஆண்டுக்கு முன்பு மழை பெய்து பாதிப்பு ஏற்பட்ட பிறகு மீட்பு பணிகள் நடைபெறும். தற்போது 283 அபாயகரமான இடங்கள் முன்கூட்டியே கண்டறியப்பட்டு, 42 குழுவினர் கண்காணித்து வருகின்றோம்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் இறப்பு எண்ணிக்கை குறைந்து உள்ளது. இந்த ஆண்டில் சராசரி கோடை மழை(435.78 மில்லி மீட்டர்) 281.84 மில்லி மீட்டர் மட்டும் பெய்தது. கடந்த 2020-ம் ஆண்டு சராசரியாக 1,920 மில்லி மீட்டர் மழை பெய்ய வேண்டும். ஆனால் 1,726.67 மழை பெய்தது. சராசரி மழை குறைந்து வருகிறது.


Similar News