மகனை இரும்பு ராடால் அடித்து கொன்ற தந்தை - ஆரணி போலீஸ் நிலையத்தில் சரண்
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த களம்பூர் அம்பேத்கார் நகரை சேர்ந்தவர் தட்சணாமூர்த்தி. இவரது மகன் பாஸ்கர் (வயது 33) கூலி வேலை செய்து வந்தார்.
பாஸ்கரும் அவரது மனைவி ரம்யாவும் கருத்து வேறுபாடு காரணமாக 6 ஆண்டாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். மனைவி பிரிந்து சென்றதால் பாஸ்கர் தந்தை தட்சணாமூர்த்தி, தாய் பவானி ஆகியோருடன் வாழ்ந்து வந்தார்.
பாஸ்கருக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. அவர் தந்தை தட்சிணாமூர்த்தி தாய் பவானியிடம் மது குடிக்க பணம் கேட்டுள்ளார். அவர்கள் பணம் கொடுக்க மறுத்துவிட்டனர்.
இதனால் பாஸ்கர் வீட்டில் இருந்த ரேசன் கார்டை எடுத்து சென்று அடமானம் வைத்து பணம் வாங்கினார். அந்த பணத்தில் மது குடித்தார்.
குடிபோதையில் வீட்டுக்கு வந்த பாஸ்கரிடம் தாய் பவானி ரேசன் கார்டை எங்கே என்று கேட்டார். அப்போது பாஸ்கர் குடிபோதையில் தாயை தாக்கினார்.
இதனை பார்த்த தட்சணாமூர்த்தி ஆத்திரமடைந்தார். அங்கிருந்த இரும்பு ராடால் பாஸ்கரை தாக்கினார்.இதில் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பாஸ்கர் சுருண்டு விழுந்து இறந்தார்.
மகன் இறந்ததை பார்த்து தாயும், தந்தையும் கதறி அழுதனர்.
பின்னர் தட்சணாமூர்த்தி களம்பூர் போலீஸ் நிலையத்திற்கு சென்று நடந்த சம்பவத்தை கூறி சரணடைந்தார்.
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாஸ்கர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் ஆரணியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.