செய்திகள்
பணியிடை நீக்கம்

முதுமலையில் வளர்ப்பு யானையை தாக்கிய பாகன் பணியிடை நீக்கம்

Published On 2021-06-28 17:53 IST   |   Update On 2021-06-28 17:53:00 IST
முதுமலையில் வளர்ப்பு யானையை தாக்கி கண்ணில் காயம் ஏற்படுத்திய பாகனை பணியிடை நீக்கம் செய்து முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் கவுசல் உத்தரவிட்டுள்ளார்.
கூடலூர்:

கூடலூர் அருகே முதுமலை புலிகள் காப்பகத்தில் 28 வளர்ப்பு யானைகள் உள்ளன. இதனை பராமரிக்க மருத்துவ குழுவினர் மற்றும் பாகன்கள் பணியாற்றி வருகின்றனர். வளர்ப்பு யானைகளை தினமும் குளிப்பாட்டி ஊட்டச்சத்து உணவுகளை வழங்குதல், வனப்பகுதிக்கு ரோந்து செல்லுதல் உள்ளிட்ட பணிகளில் பாகன்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த மே மாதம் 17-ந் தேதி வளர்ப்பு யானை சேரனை மாயார் ஆற்றில் குளிப்பதற்காக பாகன் முருகன் அழைத்து சென்றார். அப்போது யானை பாகனின் கட்டளைக்கு அடிபணியவில்லை என கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த பாகன் முருகன் யானையை கம்பால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் வளர்ப்பு யானையின் இடது கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் யானையின் கண் பார்வை பறி போனதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் கவுசல் உத்தரவின்பேரில் வனத்துறையினர் கால்நடை மருத்துவ குழுவினர் விசாரணை நடத்தினர். தொடர்ந்து யானைக்கு சிகிச்சை அளிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், வளர்ப்பு யானையின் கண்ணில் ஏற்பட்ட காயம் குணமடைந்து வருகிறது. மேலும் சிறப்பு நிபுணர் குழு மூலம் தொடர் சிகிச்சை அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றனர்.

இதனிடையே பாகன் முருகன் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. மேலும் விளக்கம் கேட்டு அவருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் வளர்ப்பு யானையை தாக்கி கண்ணில் பலத்த காயம் ஏற்படுத்தியதாக பாகன் முருகனை பணியிடை நீக்கம் செய்து புலிகள் காப்பக கள இயக்குனர் கவுசல் உத்தரவிட்டுள்ளார்.

இந்த சம்பவம் முதுமலை வனத்துறையினர் மற்றும் பாகன்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News