செய்திகள்
வேதாரண்யத்தில் உப்பு வாரும் பணியில் தொழிலாளர் ஈடுபட்டிருந்ததை காணலாம்

தூத்துக்குடியில் பெய்த பலத்த மழையால் வேதாரண்யத்தில் உச்சம் தொட்ட உப்பு விலை

Published On 2021-06-21 12:07 GMT   |   Update On 2021-06-21 12:07 GMT
தமிழகத்தில் தூத்துக்குடிக்கு அடுத்தபடியாக உப்பு உற்பத்தியில் வேதாரண்யம் 2-வது இடம் வகிக்கிறது.
வேதாரண்யம்:

நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா அகஸ்தியம்பள்ளி, கடினல்வயல், கோடியக்காடு ஆகிய பகுதிகளில் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி நடைபெறுகிறது.ஆண்டு ஒன்றுக்கு 6.5 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது.

தமிழகத்தில் தூத்துக்குடிக்கு அடுத்தபடியாக உப்பு உற்பத்தியில் வேதாரண்யம் 2-வது இடம் வகிக்கிறது. இங்கு உற்பத்தியாகும் உப்பு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் மற்றும் கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும் நாள்தோறும் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது.

வேதாரண்யம் பகுதியில் உள்ள உப்பளங்களில் நேரடியாகவும், மறைமுகமாகவும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் தொடங்கும் உற்பத்தி அக்டோபர் வரை நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு கால தாமதமாக பிப்ரவரி மாத கடைசியில் உப்பு உற்பத்தி தொடங்கப்பட்டது. அவ்வப்போது மழை பெய்ததால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதனால் ரூ.400-க்கு விற்ற ஒரு டன் உப்பு ரூ.1,200 வரை விற்பனையானது.

கடந்த வாரம் பெய்த மழையில் உப்பளங்களில் தண்ணீர் தேங்கி உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதனால் உப்பின் விலை உயர்ந்து டன் ரூ, 2,000 க்கு விற்பனையானது இந்த நிலையில் தூத்துக்குடியில் பெய்த பலத்த மழையின் காரணமாக அங்கு உப்பு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டது இதனால் தூத்துக்குடி வியாபாரிகள் வேதாரண்யத்தில் வந்து முகாமிட்டு உப்பை வாங்க தொடங்கினர். இதனால் வரலாறு காணாத அளவில் உப்பு விலை உச்சம் தொட்டுள்ளது.

கடந்த 1980-ம் ஆண்டு பெய்த மழையில் அதிகபட்சமாக வேதாரண்யத்தில் ரூ.2,000 வரை உப்பு விற்பனை ஆனது. அதன்பிறகு 40 ஆண்டுகள் கடந்து தற்போது ஒரு டன் தரமான வெள்ளை உப்பு அதிகபட்சமாக ரூ.2,200-க்கு விற்பனையாகி வருகிறது. இதனால் மகிழ்ச்சி அடைந்த உப்பு உற்பத்தியாளர்கள் கடந்த இரண்டு நாட்களாக தொழிலாளர்கள் மூவம் தீவிரமாக உப்பு வாரும் பணியிலும், பாக்கெட் போடுதல் உள்ளிட்ட பணிகளிலும் ஈடுபட்டுள்ளனர்.

கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் உப்பு உற்பத்தி மற்றும் ஏற்றுமதி தீவிரமாக நடைபெறுவதால் அதிக அளவில் தொழிலாளர்கள் முககவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் பணியாற்றி வருகின்றனர். கடும் வெயிலில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு அடிப்படை வசதிகளான குடிநீர், கழிவறை உள்ளிட்ட வசதிகள் செய்த தர வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதே வேளையில் மத்திய அரசின் அனுமதி பெற்று உப்பு உற்பத்தி செய்து வந்த உற்பத்தியாளர்களுக்கு சென்ற மார்ச் மாதத்துடன் உரிமம் முடிந்துவிட்ட நிலையில் மீண்டும் அதை மத்திய அரசு புதுப்பிக்க காலம் கடத்தி வருகிறது. எனவே உப்பு உற்பத்தியாளர்கள் நலன் கருதி உடனடியாக உப்பு உற்பத்தியில் ஈடுபட்டுள்ள 900 சிறு மற்றும் குறு உற்பத்தியாளர்களுக்கு உரிமத்தை புதுப்பிக்க வேண்டும் என உப்பு உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News