செய்திகள்
ரூ.2 ஆயிரம் மற்றும்14 மளிகை பொருட்கள் தொகுப்பை பயனாளி ஒருவருக்கு கலெக்டர் வழங்கிய போது எடுத்த படம்.

ரூ.2 ஆயிரம்-14 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு - கலெக்டர் பிரவீன் நாயர் வழங்கினார்

Published On 2021-06-16 15:00 GMT   |   Update On 2021-06-16 15:00 GMT
கொரோனா நிவாரண 2-வது தவணை தொகை ரூ.2 ஆயிரம்-14 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பை குடும்ப அட்டைதாரர்களுக்கு நாகை கலெக்டர் பிரவீன் நாயர் வழங்கினார்.
நாகப்பட்டினம்:

நாகை நீலா சன்னதியில் உள்ள நியாய விலைக்கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண 2-வது தவணை தொகை ரூ.2 ஆயிரம் மற்றும் 14 விதமான மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு ஆகியவை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் பிரவீன் நாயர் தலைமை தாங்கி பயனாளிகளுக்கு ரூ.2 ஆயிரம் மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கினார். நாகை மாலி எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அலுவலர் இந்துமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்னர் கலெக்டர் பிரவீன் நாயர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தபடி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண 2-வது தவணை தொகை ரூ.2 ஆயிரம் மற்றும் 14 விதமான மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. முன்னதாக நாகை மாவட்டத்தில் உள்ள 4 தாலுகாவில் உள்ள நியாய விலைக்கடைகள் வாயிலாக குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்கே சென்று டோக்கன் வினியோகம் செய்யப்பட்டது. ஒரு நாளைக்கு 200 நபர்கள் வீதம் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் 356 நியாய விலைக்கடைகள் செயல்பட்டு வருகிறது. இதில் 2 லட்சத்து 10 ஆயிரத்து 683 அரிசி குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இவர்களுக்கு கொரோனா நிவாரண 2-வது தவணை தொகை ரூ.2 ஆயிரம் மற்றும் 14 மளிகை பொருட்கள் அடங்கி தொகுப்பு வழங்கப்படுகிறது. நாகை மாவட்டத்தில் கொரோனா நிவாரண உதவி முதல் தவணை தொகை ரூ.2 ஆயிரம் 2 லட்சத்து 11 ஆயிரத்து 032 குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் கொரோனா தாக்கம் குறைந்து வருகிறது. தற்போது புதிய முயற்சியாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீடுகளிலேயே தனிமைப்படுத்தி கொண்டுள்ளவர்களின் வீடுகளுக்கே சென்று சத்து மாத்திரை உள்ளிட்ட மருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றன. நாகை அரசு மருத்துவமனையில் தேவைக்கேற்ப ஆக்சிஜன் சிலிண்டர் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இதில் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் நடராஜன், தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் கவுதமன், நகர இளைஞரணி அமைப்பாளர் சத்ரியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News