செய்திகள்
கொரோனா வைரஸ்

ஈரோடு மாவட்டத்தில் தொற்று குறைய தொடங்கினாலும் அதிகரிக்கும் உயிரிழப்புகள்

Published On 2021-06-06 09:00 GMT   |   Update On 2021-06-06 09:00 GMT
கொரோனா தொற்று பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக குறைய தொடங்கியுள்ளது. இருப்பினும் தினசரி உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா 2-ம் அலை வேகம் எடுத்துள்ளது. சென்னை, கோவை போன்ற பெருநகரங்களுக்கு போட்டியாக ஈரோட்டில் தினசரி பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. இதே போல் தினமும் உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது.

ஈரோட்டில் கடந்த 3 தினங்களாக தினசரி பாதிப்பு குறைந்து வந்த நிலையில் நேற்று முன்தினம் தினசரி பாதிப்பு திடீரென கூடியது. இந்நிலையில் நேற்று தினசரி பாதிப்பு சற்று குறைந்துள்ளது. சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி மாவட்டத்தில் ஒரே நாளில் 1,569 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது நேற்று முன்தினத்தை விட 50 குறைவாகும். இதனால் மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 64 ஆயிரத்து 596 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 1,721 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 48 ஆயிரத்து 269 ஆக உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களாக மாவட்டத்தில் குணம் அடைந்து வருபவர்கள் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

அதே நேரம் கடந்த சில நாட்களாக மாவட்டத்தில் கொரோனா எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. முதியவர்கள் அதிக அளவில் உயிரிழந்து வருகின்றனர். நேற்று ஒரே நாளில் 9 பெண்கள் உள்பட 24 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவுக்கு இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 425 ஆக உயர்ந்தது. தற்போது மாவட்டம் முழுவதும் 15 ஆயிரத்து 902 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா தொற்று பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக குறைய தொடங்கியுள்ளது. இருப்பினும் தினசரி உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் மக்கள் அறிகுறி தென்பட்ட உடனேயே மருத்துவரை முறையாக அணுகி அதற்கான சிகிச்சைகள் பெறாதது தான்.

ஈரோடு மாநகர் பகுதியில் ஓரளவு மக்கள் விழிப்புணர்வுடன் உள்ளனர். ஆனால் கிராமப்புறங்களில் இன்னமும் காய்ச்சல், சளி இருந்தால் அருகிலுள்ள மருந்துக்கடைகளில் மருந்து வாங்கி சாப்பிடுகின்றனர். காய்ச்சல், சளி முற்றியதும் மருத்துவமனையை நாடுகின்றனர். இதனால் அவர்களை காப்பாற்ற முடியாத சூழ்நிலை ஏற்பட்டு விடுகிறது.

எனவே கிராமப் பகுதியைச் சேர்ந்தவர்கள் யாருக்காவது காய்ச்சல், சளி இருந்தால் உடனே தாமதிக்காமல் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று பரிசோதனை செய்து கொள்ளுங்கள். இதேபோல் முககவசம், சமூக இடைவெளியை முறையாக கடைபிடியுங்கள் என அதிகாரிகள் கூறினர்.

Tags:    

Similar News