பண்ருட்டி அருகே பண்ணையில் தீவிபத்து- 8 ஆயிரம் கோழிகள் கருகின
பண்ருட்டி:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள கீழ் கவரப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சத்யராஜ்.
இவர் அதே பகுதியில் கோழிப்பண்ணை நடத்தி வந்தார். இந்த கோழி பண்ணையில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து பண்ருட்டி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். தீப்பற்றி எரிந்த கோழி பண்ணையின் மீது தண்ணீரைப் பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.
இருப்பினும் கோழிப்பண்ணையில் இருந்த 3,500 கோழிகள் தீயில் கருகி இறந்தன.
இதே போல் பிரசன்ன குமார் என்பவருக்கு சொந்தமான கோழி பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 4,500 பிராய்லர் கோழிகள் தீயில் கருகி இறந்தன.
இதுகுறித்து புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் மின் கசிவு காரணமாக கோழிப்பண்ணையில் தீ விபத்து ஏற்பட்டது தெரிய வந்துள்ளது.