செய்திகள்
பெண் டாக்டர் ஒருவருக்கு அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் பணி நியமன ஆணை வழங்கிய போது எடுத்த படம்.

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடுவதற்காக 60 டாக்டர்களுக்கு பணி நியமன ஆணை

Published On 2021-05-23 03:43 GMT   |   Update On 2021-05-23 03:43 GMT
கடலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடுவதற்காக 60 டாக்டர்களுக்கு அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், பணி நியமன ஆணை வழங்கினார்.
கடலூர்:

கடலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 42 ஆயிரத்தை கடந்துள்ளது. இவர்களில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கடலூர் நகராட்சி பகுதியைச் சேர்ந்தவர்கள். இதில் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 6 ஆயிரம் பேரில் சுமார் ஆயிரம் பேர் கடலூர் நகர பகுதியைச் சேர்ந்தவர்கள்.

இந்நிலையில் கடலூர் நகராட்சி பகுதியில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை தடுக்கும் வகையில் நேற்று, கடலூர் நகராட்சி அலுவலகத்தில் பல்வேறுத் துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு வேளாண்மை மற்றும் உழவர் நலன் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம், போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மகேந்திரன், மருத்துவ பணிகள் இணை இயக்குனர் ரமேஷ்பாபு, சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் செந்தில்குமார், கோட்டாட்சியர் ஜெகதீஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடுவதற்காக, மருத்துவ பயிற்சி முடித்த 60 டாக்டர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. மேலும் கடலூர் முதுநகரில் உள்ள ரசாயன ஆலையில் பாய்லர் வெடித்ததில் படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிதிஉதவி வழங்கப்பட்டது. தொடர்ந்து மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடன் அமைச்சர் கலந்தாலோசித்தார்.

பின்னர் ஆக்சிஜன் செறிவூட்டிகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள் மற்றும் கொரோனா தடுப்பு மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்காக குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.31 லட்சத்தை கலெக்டரிடம் வழங்கினார். இதில் நகராட்சி ஆணையர் ராமமூர்த்தி, உதவி செயற்பொறியாளர் ஜெயபிரகாஷ் நாராயணன், தாசில்தார் பலராமன், வேளாண்மை உதவி இயக்குனர் பூவராகன், துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தி மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதற்கிடையே கூட்டம் முடிந்ததும் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கடலூர் நகராட்சி பகுதியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த வீடு, வீடாகச் சென்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம். இதற்காக 45 வார்டுகளைக் கொண்ட கடலூர் நகராட்சியை 5 மண்டலங்களாக பிரித்து, மாவட்ட அளவிலான அதிகாரிகளை நியமித்து கணக்கு எடுப்பு, மருத்துவ முகாம் நடத்துதல் போன்றவை மூலமாக கொரோனா தொற்று இல்லாத நகராட்சியாக மாற்ற முடிவு செய்துள்ளோம். இதற்கு பொதுமக்கள் முழுஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

கடலூர் அரசு மருத்துவமனை, சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்பட பல்வேறு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 250 படுக்கைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

கொரோனா பரவல் முதல் அலைக்கும், 2-வது அலைக்கும் அதிக வித்தியாசம் உள்ளது. தற்போது பரவும் கொரோனா வைரஸ் நுரையீரலை அதிகமாக தாக்குவதால் ஆக்சிஜன் தேவைப்படுகிறது. இதனால், கடந்த முறை 5 நாட்களில் வீடு திரும்பிய நோயாளிகள், தற்போது 20 நாட்கள் வரையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக இருக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே, தற்போது ஆக்சிஜன் தேவைப்படும் நோயாளிகளை 4 பிரிவுகளாக பிரித்து ஆக்சிஜன் வழங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News