செய்திகள்
தனியார் ஆஸ்பத்திரியில் கொரோனா நோயாளியிடம் பணம் திருட்டு
தனியார் ஆஸ்பத்திரியில் கொரோனா நோயாளியிடம் பணம் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாம்பரம்:
சென்னையை அடுத்த மடிப்பாக்கம் அருகே உள்ள புழுதிவாக்கம், நியூ இந்தியன் காலனி, பிரதான சாலையைச் சேர்ந்தவர் ஜோசப் ஞானதாஸ்(வயது 78). கொரோனா தொற்று பாதிப்பால் கடந்த 18-ந்தேதி பெருங்களத்தூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். தனது மருத்துவ செலவுக்காக ரூ.40 ஆயிரம் இருந்த கைப்பையை படுக்கைக்கு கீழே வைத்து இருந்தார்.
பின்னர் சிகிச்சை முடிந்து ஆஸ்பத்திரிக்கு கட்டணம் செலுத்த பணத்தை தேடியபோது, ரூ.40 ஆயிரம் இருந்த பணப்பை மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி தனியார் ஆஸ்பத்திரி நிர்வாகம் விசாரித்தபோது, துப்புரவு பணியாளரான திருவண்ணாமலையைச் சேர்ந்த சூர்யா(21) கடந்த 18-ந்தேதிதான் பணிக்கு சேர்ந்ததும், தற்போது அவர் மாயமாகி இருப்பதும் தெரிந்தது.
எனவே அவர் மீது சந்தேகமடைந்த ஜோசப் ஞானதாஸ், இதுபற்றி பீர்க்கன்காரணை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.