பண்ருட்டி அருகே போலி டாக்டர் கைது
பண்ருட்டி:
பண்ருட்டி அருகே உள்ள சாத்திப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பழனி. இவர் மருந்தகம் நடத்தி வந்தார்.
இந்த மருந்தகத்தில் பழனி ஆங்கில மருத்துவம் படிக்காமலேயே ஊசி போட்டு மருந்து, மாத்திரை வழங்குவதாக காடாம்புலியூர் போலீசாருக்கு புகார் வந்தது.
இதுகுறித்து பண்ருட்டி அரசு தலைமை மருத்துவமனை தலைமை மருத்துவர் மாலினிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து டாக்டர் மாலினி தலைமையிலான மருந்துவ குழுவினர் நேரில் ஆய்வு செய்தனர்.
ஆய்வின் போது அலோபதி முறையில் மருத்துவம் பயின்றதற்கான எந்தவித சான்றும் இல்லாமல் ஆங்கில மருத்துவ முறையில் அவர் மருத்துவம் பார்ப்பது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து மருத்துவ குழு மருத்துவர் மாலினி காடாம்புலியூர் போலீசில் புகார் செய்தார். அதன்படி இன்ஸ்பெக்டர் ரேவதி வழக்கு பதிந்து தலைமறைவான போலி மருத்துவரை கைது செய்தார். அதோடு மருந்தகத்தை பூட்டிசீல் வைக்க உத்தரவிட்டார். இதனால் இந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.