செய்திகள்
கோப்பு படம்.

3 சிறுமிகளின் திருமணம் தடுத்து நிறுத்தம்

Published On 2021-04-27 16:45 IST   |   Update On 2021-04-27 16:45:00 IST
கே.வி.குப்பம் அருகே 18 வயது பூர்த்தி ஆகாத 3 சிறுமிகளின் திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
வேலூர்:

கே.வி.குப்பம் அருகேயுள்ள குறிஞ்சிநகரில் 18 வயது பூர்த்தி ஆகாத பெண்ணுக்கு திருமண ஏற்பாடு நடைபெறுவதாக வேலூர் மாவட்ட சைல்டுலைன் அலுவலகத்துக்கு புகார்கள் வந்தன. அதன்பேரில் நேற்று முன்தினம் இரவு சைல்டுலைன் அணி உறுப்பினர்கள் வெங்கடேசன், மகாலட்சுமி, சமூகநல அலுவலர் ராணி ஆகியோர் அங்கு சென்று விசாரித்தனர். அதில், குடியாத்தம் அருகே உள்ள அரசுப்பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கும், குறிஞ்சிநகரை சேர்ந்த உறவினரின் மகனுக்கும் நேற்று காலை திருமணம் நடைபெற இருந்தது தெரிய வந்தது. சிறுமிக்கு 18 வயது பூர்த்தி ஆகாததால் அந்த திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது. மேலும் இருதரப்பினரிடமும் சிறுமிக்கு 18 வயது நிரம்பிய பின்னரே திருமணம் செய்து வைப்போம் என்று அலுவலர்கள் எழுதி வாங்கி கொண்டனர்.

இதேபோன்று புலிமேடு பகுதியில் நேற்று முன்தினம் நடைபெற இருந்த 16 வயது சிறுமியின் திருமணமும், வேலூரை அடுத்த திருமலைக்கோடி பகுதியில் நடைபெற இருந்த 17 வயது சிறுமியின் திருமணமும் தடுத்து நிறுத்தப்பட்டது. 2 சிறுமிகளும் ராணிப்பேட்டையில் உள்ள குழந்தைகள் நலக்குழுமம் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அவர்கள் வீட்டில் மீண்டும் விடப்பட்டனர்.

Similar News