செய்திகள்
கொரோனா பாதிப்பு பகுதிகள் தடை செய்யப்பட்டவையாக அறிவிப்பு
ஜெயங்கொண்டத்தில் கொரோனா பாதிப்பு பகுதிகள் தடை செய்யப்பட்டவையாக அறிவிக்கப்பட்டு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஜெயங்கொண்டம்:
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று 2-வது அலையின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அரியலூர் மாவட்டத்தில் ஜெயங்கொண்டம் வேலாயுதநகர் முதல் குறுக்குத்தெருவில் ஒரே குடும்பத்தில் 3 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோல் சன்னதி தெருவில் 2 பேருக்கும், விசாலாட்சி நகரில் 3 பேருக்கும், கடைவீதியில் 2 பேருக்கும், பஸ் நிறுத்தம் ரோடு உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் தலா ஒருவருக்கும் என மொத்தம் 12 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். தொற்று ஏற்பட்டுள்ள பகுதிகளில் ஜெயங்கொண்டம் நகராட்சி ஆணையர் சுபாஷினி பரிந்துரையின்பேரில், சுகாதார ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன், பொதுப்பணி மேற்பார்வையாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் நகராட்சி பணியாளர்கள் மூலம் கிருமிநாசினி உள்ளிட்டவை தெளிக்கப்பட்டு, தடுப்பு அரண்கள் அமைக்கப்பட்டு, தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அப்பகுதியில் எச்சரிக்கை பதாகைகளும் வைக்கப்பட்டுள்ளன.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின்போது வாக்களிக்க வெளியூரில் இருந்து ஜெயங்கொண்டத்திற்கு வந்தவர்கள் மூலம் தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து செய்யப்பட்ட பரிசோதனையில் அவர்களது குடும்பத்தினருக்கும் தொற்று இருந்தது கண்டறியப்பட்டு அவர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக நகராட்சி மற்றும் சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து நடமாடும் வாகனத்தின் உதவியுடன் சுகாதாரத்துறையினர் மூலம் பொதுமக்களுக்கு பரிசோதனை செய்து வருகின்றனர்.
மேலும் பொதுமக்கள் தாமாக முன்வந்து கொரோனா தடுப்பூசியை ஆர்வத்துடன் போட்டுக் கொள்வதாகவும், கடந்த 2 நாட்களில் மட்டும் நகராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மட்டும் கடந்த ஜனவரி மாதம் 1-ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரை 49 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் தொற்று பரவாமல் இருக்க பொதுமக்கள் முககவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது, கைகளை அடிக்கடி சோப்பு போட்டுக் கழுவுவது, வெளியில் சென்று விட்டு வீட்டிற்கு வரும்போது கை, கால்களை கழுவிவிட்டு செல்ல வேண்டும் என்பது உள்ளிட்டவை தொடர்பாக பல்வேறு துறையினர், பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். கொரோனா வைரஸ் தொற்று மற்ற மாவட்டங்களை விட அரியலூர் மாவட்டத்தில் குறைந்த எண்ணிக்கையிலேயே உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.