செய்திகள்
குதிரை பந்தயம் நடந்தபோது எடுத்தபடம்.

ஊட்டியில் இன்று 2-வது நாளாக குதிரை பந்தயம்

Published On 2021-04-15 10:37 GMT   |   Update On 2021-04-15 10:37 GMT
ஊட்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் 2-வது நாளாக இன்றும் குதிரை பந்தயம் நடந்தது. நேற்று தொடங்கிய குதிரை பந்தயம் வருகிற ஜூன் மாதம் 11-ந் தேதி வரை நடக்க உள்ளது.
ஊட்டி:

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் ஒவ்வொரு ஆண்டும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு குதிரை பந்தயம் நடத்தப்படும். கடந்த ஆண்டு கொரோனா தொற்றால் நடத்தப்படவில்லை.

இந்த ஆண்டு கொரோனா வழிமுறைகளை கடைபிடித்து குதிரை பந்தயத்தை நடத்த அரசு அனுமதி கொடுத்தது. இதையடுத்து குதிரை பந்தயம் நடத்துவதற்காக ஊட்டி ரேஸ்கோர்ஸ் மைதானம் தீவிரமாக தயார் செய்யப்பட்டு வந்தது.

இந்த ஆண்டுக்கான புகழ்பெற்ற குதிரை பந்தய நிகழ்ச்சி நேற்று காலை தொடங்கியது. முதல் நாளான நேற்று தமிழ் புத்தாண்டு கோப்பைக்கான பந்தயம் உள்பட 7 போட்டிகள் நடைபெற்றது. பந்தயத்தில் பங்கேற்ற குதிரைகள் அனைத்தும் இலக்கை நோக்கி சீறிப் பாய்ந்து சென்றன. வெற்றி பெற்ற குதிரைகள் மற்றும் ஜாக்கிகளுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது.

இந்த போட்டியில் சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 300-க்கும் மேற்பட்ட குதிரைகள் கலந்து கொண்டன. இதில் பங்கேற்ற பயிற்சியாளர்கள், அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டுள்ளனர்.

தற்போது பரவி வரும் கொரோனா தொற்று காரணமாக குதிரை பந்தயத்தை பார்க்க பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் பூட்டிய மைதானத்திலேயே பந்தயம் நடைபெற்றது.

இருப்பினும் உள்ளூர் பொதுமக்கள் எட்டின்ஸ் சாலை உள்பட பல்வேறு உயரமான இடங்களில் இருந்து குதிரை பந்தயத்தை கண்டு ரசித்தனர். 2-வது நாளாக இன்றும் ஊட்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் குதிரை பந்தயம் நடந்தது. நேற்று தொடங்கிய குதிரை பந்தயம் வருகிற ஜூன் மாதம் 11-ந் தேதி வரை நடக்க உள்ளது. தி நீல்கிரிஸ் 1000 கீனிஸ், 2000 கீனிஸ், டெர்பி ஸ்டேக்ஸ், நீலகிரி தங்க கோப்பை போட்டி உள்ளிட்ட முக்கிய போட்டிகள் வரும் நாட்களில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.



Tags:    

Similar News