செய்திகள்
கோப்புபடம்

சிதம்பரத்தில் கள்ளக்காதலை கைவிடாததால் தாய் குத்திக்கொலை - எஸ்.எஸ்.எல்.சி. மாணவன் வெறிச்செயல்

Published On 2021-04-14 16:30 GMT   |   Update On 2021-04-14 16:30 GMT
சிதம்பரத்தில் கள்ளக்காதலை கைவிடாததால் தாயை கத்தியால் குத்திக்கொலை செய்த எஸ்.எஸ்.எல்.சி. மாணவனை போலீசார் கைது செய்தனர்.
சிதம்பரம்:

சிதம்பரம் அருகே உள்ள லால்புரம் ஊராட்சி தொடர்ந்தாள் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாலமுருகன்(வயது 48). இவர் சிதம்பரம் லால்கான் தெருவில் கவரிங் பட்டறை நடத்தி வருகிறார்.

இவருடைய மனைவி சங்கீதா(40). இவர்களுக்கு 15 வயதில் மகன் உள்ளான். இவன், அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் எஸ்.எஸ்.எல்.சி. படித்து வருகிறான்.

இந்த நிலையில் சங்கீதாவிற்கும், அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் அவர்களுக்குள் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசி வந்தனர்.

அதுமட்டுமின்றி பாலமுருகன் வீட்டில் இல்லாத நேரத்தில் அந்த வாலிபர் சங்கீதாவை பார்க்க வந்ததாக தெரிகிறது. இது அந்த மாணவனுக்கு பிடிக்கவில்லை. இதை கண்டித்தும் சங்கீதா கேட்கவில்லை. இது தொடர்பாக அந்த மாணவன், தனது தாயின் நடத்தை குறித்து பாலமுருகனிடம் கூறினான்.

அவரும், தனது மனைவியை கண்டித்தார். இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.

இதனால் கோபித்துக்கொண்ட சங்கீதா, சிதம்பரம் கொத்தங்குடி தோப்பில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றார். பின்னர் அங்கிருந்து நேற்று மதியம் சங்கீதா தொடர்ந்தாள் அம்மன் கோவில் தெருவில் உள்ள தனது வீட்டிற்கு வந்தார். அப்போது பாலமுருகன், சங்கீதா, மகன் ஆகிய 3 பேருக்குள் தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த மாணவன், தான் வைத்திருந்த கத்தியால் பெற்ற தாய் என்றும் பாராமல் சங்கீதாவி்ன் வயிற்றில் சரமாரியாக குத்தினான். இதில் குடல் வெளியே வந்து, ரத்த வெள்ளத்தில் சங்கீதா துடிதுடித்து இறந்தார்.

இதனை தொடர்ந்து அந்த மாணவன் நேராக சிதம்பரம் தாலுகா போலீஸ் நிலையத்திற்கு சென்று, வாலிபர் ஒருவருடன் வைத்திருந்த கள்ளக்காதலை கைவிடாததால் தனது தாயை தானே கொலை செய்து விட்டதாக கூறி சரண் அடைந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிதம்பரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சங்கீதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவனை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News