செய்திகள்
ஊட்டி குதிரை பந்தய மைதானத்தை காணலாம்.

ஊட்டியில் குதிரை பந்தயம் நாளை தொடங்குகிறது- பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை

Published On 2021-04-13 03:38 GMT   |   Update On 2021-04-13 03:38 GMT
கொரோனா பரவல் அதிகமாகி வருவதால் குதிரை பந்தயத்தை நேரில் பார்க்க பார்வையாளர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை.
ஊட்டி:

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் கடந்த 1905-ம் ஆண்டு முதல் புகழ்பெற்ற குதிரை பந்தயம் நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு காரணமாக குதிரை பந்தயம் நடத்தப்படவில்லை. இந்த ஆண்டில் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி குதிரை பந்தயம் நாளை (புதன்கிழமை) தொடங்குகிறது.

இதையொட்டி பெங்களூரு, மும்பை, ஐதராபாத், சென்னை, புனே போன்ற இடங்களில் இருந்து 250-க்கும் மேற்பட்ட குதிரைகள் லாரிகளில் கொண்டு வரப்பட்டு உள்ளன. தினமும் காலை, மாலையில் குதிரைகளுக்கு நடைபயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

நாளை முதல் வருகிற ஜூன் மாதம் 11-ந் தேதி வரை 18 நாட்கள் குதிரை பந்தயம் நடக்கிறது. ஓடுதள ஓரத்தில் 4 இடங்களில் உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டு, நவீன கேமராக்கள் பொருத்தப்படுகிறது. குறிப்பாக அடுத்த மாதம்(மே) 13, 14, 21, 22-ந் தேதிகளில் நீலகிரி கின்னீஸ் கோப்பை மற்றும் 27, 28, ஜூன் மாதம் 4, 5-ந் தேதிகளில் நீலகிரி தங்க கோப்பைக்கான பந்தயம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

கொரோனா பரவல் அதிகமாகி வருவதால் குதிரை பந்தயத்தை நேரில் பார்க்க பார்வையாளர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை.

இதுகுறித்து குதிரை பந்தய நிர்வாகத்தினர் கூறும்போது, இந்த ஆண்டில் ஊட்டி குதிரை பந்தய மைதானத்தில் குதிரை பந்தயம் பார்வையாளர்கள் இல்லாமல் நடைபெறுகிறது. குதிரை பந்தயம் நடைபெறும் நாட்களில் பார்வையாளர்கள் கட்டாயம் உள்ளே அனுமதிக்கப்படமாட்டார்கள்.

தமிழக அரசு தெரிவித்த கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி நடத்தப்படுவதால், மைதானத்தில் உள்ள கவுண்ட்டர்கள் செயல்படாது. குதிரைகளை பராமரிப்பவர்கள், ஜாக்கிகள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டு உள்ளனர். இதுகுறித்து மாவட்ட கலெக்டருக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது என்றனர்.

ஊட்டியில் குதிரை பந்தயம் தொடங்கியதும், கோடை சீசன் களை கட்ட ஆரம்பிக்கும். இந்த பந்தயத்தை சுற்றுலா பயணிகள் நுழைவு சீட்டு எடுத்து கேலரியில் அமர்ந்து கண்டு ரசிப்பார்கள். ஆனால் கொரோனா பரவல் காரணமாக தற்போது கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News