செய்திகள்
கோப்பு படம்

கே.வி.குப்பம் தொகுதியில் ஓட்டுக்கு பணம் கொடுத்த தி.மு.க.வினர் 2 பேர் கைது

Published On 2021-04-03 11:29 GMT   |   Update On 2021-04-03 11:29 GMT
கே. வி குப்பம் சட்டமன்றத் தொகுதியில் உள்ள துத்தி தாங்கல் கிராமத்தில் நேற்று நள்ளிரவில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்தது.

வேலூர்:

வேலூர் மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலையொட்டி ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அளிக்கும் புகாரின்பேரில் பறக்கும் படை அதிகாரிகள் ஓட்டுக்கு பணம் கொடுப்பவர்களிடம் இருந்து பணத்தைப் பறிமுதல் செய்து வருகின்றனர்.

கே. வி குப்பம் சட்டமன்றத் தொகுதியில் உள்ள துத்தி தாங்கல் கிராமத்தில் நேற்று நள்ளிரவில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்தது.

இதனையடுத்து பறக்கும் படை அலுவலர் லட்சுமிபதி தலைமையில் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். துத்திதாங்கல் கிராமத்தை சேர்ந்த தட்சிணாமூர்த்தி (வயது51)வீரசெட்டி பள்ளி கிராமத்தை சேர்ந்த ரமேஷ் (42) ஆகியோர் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்து கொண்டிருந்தனர்.

அவர்களிடமிருந்து ரூ.21 ஆயிரத்து 880 மற்றும் தி.மு.க தேர்தல் அறிக்கை சம்பந்தமான நோட்டீசுகள் வாக்காளர் பட்டியல் அடங்கிய நோட்டுப் புத்தகம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

பிடிபட்ட 2 பேரையும் கே. வி குப்பம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.விசாரணையில் தி.மு.க. சார்பில் அவர்கள் வாக்காளர்களுக்கு பணம் சப்ளை செய்தது தெரியவந்துள்ளது. இன்ஸ்பெக்டர் முரளி இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தார். 

Tags:    

Similar News