செய்திகள்
செய்யாறு அருகே வாலிபர் கொடூர கொலை - கை, கால்களை கட்டி பிணம் ஏரியில் வீச்சு
செய்யாறு அருகே வாலிபரை கொடூரமாக கொலை செய்து கை, கால்களை கட்டி பிணத்தை ஏரியில் வீசியுள்ளனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
செய்யாறு:
வெம்பாக்கம் தாலுகா பூதேரி ஏரியில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் அழுகிய நிலையில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் பிணம் தண்ணீரில் மிதப்பதாக மோரணம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, தண்ணீரில் மிதந்த வாலிபரின் உடலை மீட்டனர். அப்போது உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் கிடந்தன. எனவே, அவரை கொடூரமாக கொலை செய்து கை, கால்களை கட்டி பிணத்தை ஏரியில் வீசியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
அதை தொடர்ந்து போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, வாலிபர் கொலை செய்து ஏரியில் வீசியது யார்? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். வாலிபர் ஏரியில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.