செய்திகள்
போராட்டம்

தா.பழூர் அருகே சாலையோரத்தில் கிராம மக்கள் காத்திருப்பு போராட்டம்

Published On 2021-03-05 18:02 IST   |   Update On 2021-03-05 18:02:00 IST
தா.பழூர் அருகே சாலையோரத்தில் கிராம மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தா.பழூர்:

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள இருகையூர் ஊராட்சியில் இலவச மாடு வழங்கும் திட்டத்தில் மாடுகளை பெற்ற பயனாளிகளுக்கு, மாட்டுக்கொட்டகை அமைக்கும் திட்டத்தின் கீழ் கொட்டகை அமைக்க கோரி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் விண்ணப்பித்து இருந்தனர்.

அதில் 50-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு இதுவரை மாட்டுக்கொட்டகை அமைக்க நிர்வாக அனுமதி வழங்கப்படவில்லை.ஊராட்சி மன்ற தலைவருக்கு நெருக்கமானவர்களுக்கு மட்டும் மாட்டுக்கொட்டகை அமைக்க பணி ஆணை பெற்றுத் தரப்பட்டதாக குற்றம்சாட்டி கோட்டியால் பாண்டிபஜார் நால்ரோடு பகுதியில் தா.பழூர்-சுத்தமல்லி சாலையில் சாலை மறியல் முயற்சியில் கிராம மக்கள் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட தா.பழூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன், மறியலில் ஈடுபட முயன்றவர்களை தடுத்து, சாலை மறியல் செய்யக்கூடாது என்று அறிவுறுத்தினார்.

இதைத்தொடர்ந்து இருகையூர் கிராம மக்கள், தங்களுக்கு மாட்டுக் கொட்டகை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி சாலையோரத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் அகிலா மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் தட்சிணாமூர்த்தி ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து கிராம மக்கள் காத்திருப்பு போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Similar News