செய்திகள்
முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டபோது எடுத்த படம்.

நாராயணசாமி கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்

Published On 2021-03-04 04:29 GMT   |   Update On 2021-03-04 04:29 GMT
முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, வைத்திலிங்கம் எம்.பி. ஆகியோர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
புதுச்சேரி:

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி மாதம் 16-ந் தேதி தொடங்கியது. அதன்படி சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

இதன் அடுத்த கட்டமாக 60 வயதை கடந்த அனைவருக்கும், இணை நோய்களை கொண்ட 45 வயதை கடந்த அனைவருக்கும் கடந்த 1-ந் தேதி முதல் 2-ம் கட்டமாக தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.

அதன்படி புதுச்சேரி மாநிலத்திலும் 2-ம் கட்டமாக கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. புதுச்சேரியில் இந்திராகாந்தி அரசு மருத்து வமனையில் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, வைத்திலிங்கம் எம்.பி. ஆகியோர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர். அதன்பின் அவர்கள் அரை மணி நேரம் மருத்துவமனையில் டாக்டர்கள் கண்காணிப்பில் இருந்தனர்.

அப்போது புதுவை சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் மற்றும் அதிகாரிகள் பலர் உடனிருந்தனர். அதேபோல் புதுவை காவல்துறையை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் போலீசார் தடுப்பூசி போட்டு வருகிறார்கள்.

சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

புதுச்சேரியில் 25 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. முதலில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு பலர் தயக்கம் காட்டி வந்தனர். தற்போது தடுப்பூசி போடும் நபர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது.

புதுவையில் நாளை (இன்று வியாழக்கிழமை) முதல் தனியார் மருத்துவமனையில் தடுப்பூசி போட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அங்கு கட்டணமாக ரூ.250 வசூலிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News