செய்திகள்
அதிமுக

அதிமுக வேட்பாளர்கள் விருப்ப மனு- 7 நாட்களில் 5 ஆயிரம் விண்ணப்பங்கள் வினியோகம்

Published On 2021-03-03 02:57 GMT   |   Update On 2021-03-03 02:57 GMT
அதிமுக விருப்பமனு வினியோகிக்கப்பட்ட கடந்த 7 நாட்களில் 5 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
சென்னை:

தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, அ.தி.மு.க. சார்பில் வேட்பாளர் விருப்ப மனு வினியோகம் கடந்த மாதம் 24-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. விருப்ப மனு வினியோகம் இன்றுடன் நிறைவடைகிறது என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதனைத்தொடர்ந்து அ.தி.மு.க.வினர் நேற்று விருப்ப மனு வாங்குவதிலும், அந்த மனுக்களை தாக்கல் செய்வதிலும் ஆர்வம் காட்டினர். சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் விராலிமலை தொகுதிக்கும், அ.தி.மு.க. அமைப்புச் செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான டாக்டர் மைத்ரேயன் மயிலாப்பூர், வேளச்சேரி தொகுதிகளிலும், செய்தி தொடர்பாளரும், ஜெயலலிதா பேரவை மாநில இணைச்செயலாளருமான வா.புகழேந்தி ஓசூர், அண்ணாநகர் தொகுதிகளிலும் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்தனர். அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் (ஆரணி), முன்னாள் எம்.பி. மரகதம் குமரவேல் (மதுராந்தகம், செய்யூர்), ஜெயலலிதா பேரவை மாவட்ட இணைச்செயலாளர் வக்கீல் ஜெகதீசன் (செங்கல்பட்டு) உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நேற்று விருப்ப மனு தாக்கல் செய்தனர்.

இதனால் அ.தி.மு.க. அலுவலகமே திருவிழா கோலம் பூண்டதுபோல காணப்பட்டது. மனு தாக்கல் செய்யும் இடம் கட்சியினரின் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. அந்த வகையில் விருப்பமனு வினியோகிக்கப்பட்ட கடந்த 7 நாட்களில் 5 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. விருப்ப மனு அவகாசம் இன்றுடன் முடிவதால், அ.தி.மு.க.வினர் இன்று மனு தாக்கல் செய்ய அதிகம் ஆர்வம் காட்டுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News