செய்திகள்
ஆய்வுக்கூட்டத்தில் கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி பேசிய போது எடுத்த படம்.

ரூ.1 லட்சத்துக்கு மேல் வங்கிக்கணக்கில் வரவு வைக்கும் நபர்களின் விவரங்களை தெரிவிக்க வேண்டும்

Published On 2021-03-02 02:37 GMT   |   Update On 2021-03-02 02:37 GMT
ரூ.1 லட்சத்துக்கு மேல் வங்கி கணக்கில் வரவு செய்யும் நபர்களின் விவரங்களை தெரிவிக்க வேண்டும் என்று வங்கி அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
கடலூர்:

சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு பணப்பரிவர்த்தனை தொடர்பாக வருமான வரித்துறை மற்றும் வங்கி அதிகாரிகளுக்கான ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான சந்திரசேகர் சாகமூரி தலைமை தாங்கி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

சட்டமன்ற தேர்தலையொட்டி சந்தேகத்திற்கிடமான வகையில் பணப்பரிவர்த்தனை நிகழும் போது அந்த விவரம் குறித்த தகவல்களை வங்கியாளர்களிடமிருந்து பெற மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் சட்டமன்ற தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

ஆகவே ஒரு வங்கிக்கணக்கில் கடந்த 2 மாதங்களாக பணப்பரிவர்த்தனை ஏதும் நடைபெறாத நிலையில் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு, திடீரென சந்தேகத்திற்கிடமான வகையில் ரூ.1 லட்சத்திற்கு மேல் வங்கிக்கணக்கில் வரவு, பற்று செய்யப்பட்டால் அதன் விவரங்களை உடனடியாக தெரிவிக்க வேண்டும்.

ஒரு வங்கிக்கணக்கில் இருந்து பல்வேறு நபர்களின் வங்கிக் கணக்கிற்கு ஆர்.டி.ஜி.எஸ். மூலம் தேர்தல் காலத்தில் பணப்பரிவர்த்தனை நடைபெறும் போது அது பற்றிய தகவல்களை தெரிவிக்க வேண்டும். வேட்பாளர் மற்றும் வேட்பாளரின் குடும்பத்தை சேர்ந்தோர் ஆகியோரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.1 லட்சத்திற்கு மேல் வங்கிக் கணக்கில் வரவு, பற்று செய்யப்பட்டால் அதன் விவரங்களை உடனே தெரிவிக்க வேண்டும்.

அரசியல் கட்சியின் வங்கிக்கணக்கில் ரூ.1 லட்சத்திற்கு மேல் வங்கிக்கணக்கில் வரவு, பற்று செய்யப்பட்டால் அதன் விவரங்களையும் தெரிவிக்க வேண்டும். இதர சந்தேகத்திற்கிடமான பணப்பரிவர்த்தனைகள், மேற்கண்ட விதிமுறைகளின் படி சட்டமன்ற பொது தேர்தல் நேர்மையாகவும், சுமுகமாகவும் நடைபெற மாவட்ட நிர்வாகத் திற்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ், மாவட்ட வருவாய் அதிகாரி அருண்சத்யா, உதவி ஆணையர் (வருமான வரி) ஷாலினி, முன்னோடி வங்கி மேலாளர் அகிலன், துணை போலீஸ் சூப்பிரண்டு (கலால்) ஸ்ரீதரன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) சரஸ்வதி, தேர்தல் தாசில்தார் பாலமுருகன் மற்றும் வங்கி மேலாளர்கள், வங்கி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News