செய்திகள்
திட்டக்குடி அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்: 2 மாணவர்கள் பலி
திட்டக்குடி அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் பள்ளி மாணவர்கள் 2 பேர் உயிரிழந்தனர்.
திட்டக்குடி:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த செங்கமேடு கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ். இவருடைய மகன் பிரவீன்குமார்(வயது 17). அதே பகுதியை சேர்ந்தவர் இங்கர்சால் மகன் ஜெயசூர்யா(17).
நண்பர்களான இவர்கள் இருவரும் இறையூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பிரவீன்குமாரும், ஜெயசூரியாவும் மோட்டார் சைக்கிளில் பெண்ணாடத்தில் இருந்து செங்கமேடு பகுதிக்கு வந்து கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை ஜெயசூர்யா ஓட்டினார்.
கூடலூர் அருகே வந்து கொண்டிருந்தபோது, எதிரே வந்த லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக இவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ஜெயசூர்யா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் பலத்த காயமடைந்த பிரவீன்குமாரை அக்கம்பக்கத்தினர் மீ்ட்டு சிகிச்சைக்காக திட்டக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதற்கிடையே இதுபற்றி அறிந்த ஆவினங்குடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் பலியான ஜெயசூர்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திட்டக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
லாரி மோதி 2 மாணவர்கள் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.