செய்திகள்
கோப்புபடம்

வத்திராயிருப்பு அருகே 1,520 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் - 2 பேர் தப்பி ஓட்டம்

Published On 2021-02-18 14:14 GMT   |   Update On 2021-02-18 14:14 GMT
வத்திராயிருப்பு அருகே 1,520 கிலோ ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
வத்திராயிருப்பு:

வத்திராயிருப்பு அருகே உள்ள மகாராஜபுரம் நடுத்தெரு பெருமாள் கோவில் அருகே உள்ள வீடுகளுக்கு சென்று மாட்டு தீவனத்திற்காக 2 பேர் ரேஷன் அரிசி வாங்குவதாக வட்ட வழங்கல் அலுவலர் (பொறுப்பு) கோதண்டராமனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இந்த தகவலின் அடிப்படையில் வட்ட வழங்கல் அலுவலர் (பொறுப்பு) கோதண்டராமன், வருவாய் ஆய்வாளர் மதியழகன் ஆகியோர் மகாராஜபுரம் நடுத்தெரு பெருமாள் கோவில் பகுதிக்கு சென்று சோதனை நடத்தினர்.

இந்த அதிரடி சோதனையில் அப்பகுதியில் வாங்கி பதுக்கி வைத்திருந்த 33 சிப்பம் கொண்ட 1,520 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.

அந்த பகுதியில் உள்ள வீடுகளில் மேலும் சோதனை செய்த போது சட்டவிரோதமாக மூடை, மூடையாக வாங்கி பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசியை கைப்பற்றிய அதிகாரிகள் ஸ்ரீவில்லிபுத்தூர் நுகர்பொருள் வாணிப கிடங்குகளில் ஒப்படைத்தனர்.

மேலும் மகாராஜாபுரம் பகுதிகளில் ரேஷன் அரிசியை வாங்கி கொண்டு இருந்த இருவர் தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து வட்ட வழங்கல் அலுவலர் விசாரணை நடத்தி வருகிறார். மேலும் இதுபோன்று சட்டவிரோதமாக ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News